Friday, February 16, 2024

 

டானியல் அன்ரனி (1947.07.13 - 1994)



யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர், விமர்சகர், பத்திரிகையாளர். இவர் ஆரம்பத்தில் சிறுகதைகளை ராதா, சிந்தாமணி, சுந்தரி போன்ற பத்திரிகைகளில் எழுதி வந்தார். காலப்போக்கில் முற்போக்கு இலக்கியத்தின் தாக்கத்தினாலும் நல்ல இலக்கியங்களில் ஏற்பட்ட பரீட்சயம் காரணமாகவும் சமூகப் பார்வையோடு கூடிய சிறுகதைகளை எழுதத் தொடங்கினார்.

இவர் "செம்மலர் இலக்கிய வட்டத்தின் உருவாக்கத்தில் பங்காற்றியவர். இவ் அமைப்பினூடாக "அணு" என்ற சஞ்சிகையை வெளியிட்டார். மூன்றாவது இதழுடன் வெளியீடு தடைப்பட்டபின் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1979 இல் "சமர்" என்னும் சஞ்சிகையை ஆரம்பித்து 1990கள் வரை நடாத்தினார்.

Euro Asia arts & science academic international நிறுவனம் 2014.08.10 அன்று பிரான்ஸ் நாட்டில் நடாத்திய பல்துறை சார்ந்த விருது வழங்கும் விழாவில் இவரது கலை இலக்கியத்துறை மற்றும் விளையாட்டு சமூக சேவைகளைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கிக் கௌரவித்தது.

 

 

நாவாந்துறையின் நாட்டுக்கூத்து அடையாளம்

                           யோ.யோன்சன் ராஜ்குமார்,திருமறைக்கலாமன்ற உதவி இயக்குநர்.

               நாவாந்துறை மண்ணிற்குப் புகழ் சேர்த்த அண்ணாவியார் அமரர் செ.டானியல் பெலிக்கான் அவர்களை கடந்த 15 வருடங்களுக்கு மேலாக அறிந்திருந்தேன். திருமறைக்கலாமன்றத்தின் கூத்து விழாக்களை அண்ணாவியார் பேக்மன் ஐெயராஐா அவர்களுடன் இணைந்து பொறுப்பேற்று நடத்தியபோது அவருக்கும் எனக்குமான உறவு ஆரம்பித்தது எனலாம். குறிப்பாக 2003 ஆம் ஆண்டு தேசிய அளவில் கூத்து விழாவினை நடத்தியபோது தென்மோடிக்கூத்து தொடர்பான கருத்தமர்வு ஒன்றினை செயலமர்வாக நடத்துவதற்காக அண்ணாவியாரை அணுகிய போது அவர் சம்மதித்ததுடன் அங்கு வந்திருந்த மட்டக்களப்பு, வன்னி, மன்னார்,மலையக கலைஞர்கள் மத்தியில் யாழ்ப்பாண தென்மோடிக்கூத்து தொடர்பான சில பாடல்களை செய்து காட்டுகையாக அளிக்கை செய்து உதவினார். அதுமட்டுமன்றி அவ்வருடம் நாம் நடத்திய கூத்து போட்டியில் "புனிதவதி" என்ற கூத்தினை எமது போட்டிக்கு சமர்ப்பித்து முதலாம் இடம் பெற்று பலரது பாராட்டுக்களையும் பெற்றார்.

         தொடர்ந்து யாழ்ப்பாணத்து தென்மோடிக்கூத்து தொடர்பான ஆய்வொன்றினை மேற்கொண்டபோது அவரை அணுகி தகவல்களை கேட்டபோது தான் அறிந்து வைத்திருந்த தகவல்களை உளபூர்வமாக பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து மன்றத்திலே கூத்து விழாவொன்றிலே அவரை கௌரவித்த போது அவரைப்பற்றிய விடயங்களை அவர் வாயிலாகக் கேட்டு உரையாடி பதிவு செய்தேன்.அதுமட்டுமன்றி திருமறைக்கலாமன்றம் தென்மோடிக் கூத்தின் பாடல்களை அழிந்து விடாது பாதுகாக்க வேண்டும் என்ற பேரவாவுடன் 158 இராகங்களை இனங்கண்டு பதிவாக்கம் செய்தபோது அதன் தொகுப்பாளர்களாகிய அண்ணாவியார் பேக்மன் ஐெயராஐா அவர்களும் நானும், அவரை அணுகியபோதெல்லாம் பலவகையிலும் ஆலோசனைகளை வழங்கினார்.

         எல்லாவற்றையும் விட பாடசாலை மட்டத்தில் நடைபெறும் தமிழ்தினப்போட்டிகளில் நாடகப்போட்டிகளில் எனது கூத்துக்களும் அவரது கூத்துக்களும் மோதுகின்ற சந்தர்ப்பங்கள் ஏற்பட்டபோது, எனது கூத்துக்கள் ஆட்ட நாட்டுக்கூத்துக்களாக இருந்தகாரணத்தினால் முதலிடங்களைப்பெற்றபோதும் என்னை தனது மாணவர்களிலொருவராக எண்ணி உரிமையுடனும் மகிழ்வுடனும் பாராட்டியமையை இன்றும் மறக்கமுடியாதுள்ளது. எனது நாடக பிரதிகளை தருமாறு வாங்கி அவற்றினை வாசித்து பாராட்டியுமுள்ளார். அந்தவகையில் அவரது பெரும்குணத்தினை எண்ணி நான் வியப்பதுண்டு.

         அண்ணாவியார் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருந்தாலும் அவர் நெறிப்படுத்திய பல கூத்துக்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.ஆனால் அவர் நடித்த கூத்துக்களை நேரடியாக பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டவில்லை. ஆனால் அதற்கெல்லாம் சந்தர்ப்பம் வழங்கியது போல நாவாந்துறையில் அவருக்கு கிடைத்த கலாபூசண விருதுக்கான பாராட்டு வைபவம் ஒன்றில் அவர் பாடிய கல்வெட்டு சிந்து, சபையையே அதிர வைத்ததுடன் அவரது முழு ஆளுமையையும் பறைசாற்றியது. திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நான் ஆசிரியராக கற்பித்தபோது அவரது பேத்தி ஜீவனா(செளந்திரன் அவர்களின் மருமகள்) என்னிடம் பயின்ற போது அவரை எனது கூத்துக்களில் , நாடகங்களில் நடிப்பதற்கு பயன்படுத்தினேன். அம் மாணவியின் செயற்திட்டத்திற்கும் அண்ணாவியாரையே ஆய்வு செய்யுமாறு பணித்தேன். என்மேல் கொண்டிருந்த அபிமானத்தினை அத்தகவல் வழங்கலில் காட்டி இருந்தார்.

     எல்லாவற்றுக்கும் மேலாக யாழ்ப்பாணக் கலாசார பேரவையினால் மூத்த கூத்தர்கள் நால்வரை வீடியோ ஆவணப்படுத்தும் செயற்றிட்டமொன்றினை மேற்கொள்வதற்கு இவரையே முதலாவது ஆளாக தெரிவு செய்து அவரோடு கலந்துரையாடி அதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருந்த போது அது கைகூடுமுன்னமே அவரது இறப்பு சம்பவித்தது.மிகவும் வேதனையானது.

அமைதியும் தன்னடக்கமும் கொண்ட கலைஞனாக ஆர்ப்பாட்டமில்லாமல் சாதனை படைத்தவராக பெயர்,புகழ் என்பவற்றினைத் தேடி ஓடாதவராக, யாழ்ப்பாணத் தென்மோடி கூத்துமரபின் ஆழங்களை அறிந்த மிகச் சிலரில் ஒருவராக,

நெஞ்சிலே நிலைத்து நிற்கின்ற மதிப்பார்ந்த அண்ணாவியார் அவர்களின் நினைவு முற்கூறல்களுடன் அவர் பற்றி நான் அறிந்தவைகளுடாக ஒரு பதிவினை இக்கட்டுரை மூலமாக முன்வைக்க விரும்புகின்றேன்.

 

நாவாந்துறையும் நாட்டுக்கூத்து மரபும்

           யாழ் நகரின் தென்மேற்குப் பகுதியில் கடலோடு அண்டிய கிராமமாக காணப்படுகின்ற நாவாந்துறை ஒரு காலத்தில் நாவாய்த்துறை என அழைக்கப்பெற்ற, சிறிய நாவாய்கள் படகுகள் கட்டப்படுவதற்கான துறைமுகமாக இருந்த இடமாகும். ஊர்காவற்றுறைப் பகுதியில் தமது பெரிய கப்பல்களை தரிக்கவிடும் போர்த்துக்கேயர்கள் சிறிய நாவாய்கள் மூலமாக யாழ் நகருக்கு வருவதற்கு பயன்படுத்திய துறைமுகமாகும். அவ்விடத்தில் சுதேசிகள்  படிப்படியாக தங்கி குடியேறி தமக்கென ஆலயங்களும் அமைத்து குடியேற்றமாக மாறினார்கள் என்பதும், "நாவாய்துறை" நாவாந்துறையாக மருவியது என்பது வரலாறு. இப்பிரதேசம் வடக்குத் தெற்குப் பகுதிகளாக இரண்டு சமூகங்களை அடிப்படையாக கொண்ட கலாசாரத் தனித்துவங்களைக் கொண்ட பிரதேசமாகும். இது நற்கலை பல தந்த கிராமமாக காணப்படுகின்றது. குறிப்பாக நாட்டுக்கூத்து மரபினை தமது உயிர்த்துவமுடைய கலையாக பேணிய கிராமங்களிலொன்றாக மிக உயர்ந்து நிற்கின்றது.

         யாழ்ப்பாணத்தின் தென்மோடிக் கூத்தானது கத்தோலிக்க மரபுக்கூத்தாக பல்வேறு மாற்றங்களை உள்வாங்கி வடிவம் பெற்றபின் அதனை வளர்த்த பல கரையோரக் கிராமங்களில் நாவாந்துறையும் ஒன்று. இக் கூத்து மரபில் ஒரு மிகப்பெரிய சாதனைய தோற்றுவித்த அமரர் பூந்தான் யோசேப்பு அவர்கள் தனது பாலப் பருவத்தில் நாவாந்துறையில் பார்த்த இம்மானுவேல் நாட்டுக்கூத்து தான் தனக்கு கூத்தார்வத்தினை தூண்டியதாக அவரது வாழ்க்கை வரலாற்றில் கூறியுள்ளார். அந்தளவுக்கு இங்கு புலவர் மரியாம்பிள்ளை, புலவர் சூசைப்பிள்ளை, புலவர் கிறிஸ்தோப்பர், புலவர் எஸ்தாக்கி என பல புலவர்களும் , சூசையக்கரசு , சந்தியா இளையதம்பி மனுவல் நீக்கிலாப்பிள்ளை, மனுவல் ஆசீர்வாதம் என பல அண்ணாவிமார்களும் தோன்றி எமது மரபுவழிக் கலைக்கு உயிர் கொடுத்திருக்கின்றார்கள்.இத்தகைய பெருமைக்குரிய நாடகப் பரம்பரையிலேயே அண்ணாவியார் டானியல் பெலிக்கான் தோன்றுகின்றார்.

👇கூத்தின் ஆர்வமும் வளர்ச்சியும்👇

         நாவாந்துறை தெற்கு வடக்கு என இரண்டு பகுதிகளிலும் கூத்துக்கள் நடைபெறுகின்ற சூழலில் வாழ்ந்த டானியல் பெலிக்கானுக்கு கூத்துக்கலையில் ஆர்வம் ஏற்பட்டதொன்றும் அதிசயமல்ல. இவரது தந்தையார் செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் சிறந்த நாட்டுக்கூத்துக் கலைஞராகவும் இசை ஆர்வலனாகவும் இருந்துள்ளார். அதனால் தந்தையாரே தனயனுக்கு முதல் "மாதிரியாக" (Modal) விளங்கி இருப்பார் எனக்கொள்ளலாம்.அதனைவிட சங்கரதாஸ் வழிவந்த இசைநாடக மரபும், பத்துவாட்டியார் மடுவம், கொட்டடி கறுத்தார் மடுவம் என இவரது அயலில் நடைபெற்றவை. அந்த வகையில். இவர் தனது ஒன்பது வயதில் ஏழு பிள்ளை நல்லதங்காள் என்ற இசைநாடகத்தில் நல்ல தங்காளின் மகளாக நடித்ததுடன் இவரது கலையரங்கப் பிரவேசம் நடந்து விடுகின்றது. தொடர்ந்து இசை நாடக மரபில் ஆர்வம் இருந்தாலும் அதனை தொடரும் சந்தர்ப்பம் இல்லாது போயிருக்கவேண்டும். பின்னர் 23 வயதில் "வீரத்தளபதி" (செபஸ்ரியார்) முழு இரவுக் கூத்தில் இளவரசன் பாத்திரத்தில் நடித்ததுடன் இவரது தொடர் அரங்கச் செயற்பாடு ஆரம்பித்தது எனலாம்.

       கூத்தின் வளர்ச்சியும் சாதனைகளும்

             படிப்படியாக தனது கிராமத்தின் கூத்துகளில் நடித்துப் பெயரெடுத்துக் கொண்டிருந்த பெலிக்கான் அவர்களுக்கு புலவர்களான சூசைப்பிள்ளை, கலைக்கவி எஸ்தாக்கி ஆகியோர் சிறந்த வழிகாட்டிகளாக இருந்துள்ளனர் "செபஸ்தியார்", "அலசு" போன்ற கூத்துக்கள் இவரைச் சிறந்த கூத்துக் கலைஞனாக கிராமத்தில் இனங்காட்டின. தொடர்ந்து இவர் அமரர் பூந்தான் யோசேப்பு அவர்களின் பார்வையில் பட்டு விடுகின்றார் உண்மையில் பூந்தான் யோசேப்புவின் காலம் தென்மோடி கூத்துமரபின் பொற்காலம் என்று கூறலாம். யாழ் நவரச நாட்டுக் கூத்து கலாமன்றம் என்ற பெயரில் அமைப்பினை உருவாக்கி பிரதேசங்கள் தோறும் சிறப்பிடம் பெற்ற கலைஞர்களை ஒன்றினைத்து கூத்துக்களை மிகச் சிறப்பாக மேடையேற்றியவர்  அமரர் பூந்தான் யோசேப்பு அவரது கூத்துகளில் ஆளுமை மிக்க பல  அண்ணாவிமார்கள்  நடித்தார்கள். அந்த தேர்ந்த கலைஞர்களின் சேர்க்கை அண்ணாவியாரை  புடமிட்டது எனலாம். நவரச நாட்டுக் கூத்துக் கலாமன்றத்தின் தேவசகாயம்பிள்ளை,அலங்காரரூபன், சஞ்சுவான், எஸ்தாக்கியர், மரியதாசன், கருங்குயில் குன்றத்துக்கொலை, மனம் போல் மாங்கல்யம், சங்கிலியன் என பல கூத்துகளில் முக்கிய வேடமேற்று நடித்தார். பக்கிரி சின்னத்துரை பூந்தான் யோசேப்பு, ராசாத்தம்பி, 

வின்சன் டிபோல் செல்லையா, லூயிஸ், திருச்செல்வம், பொன்னுத்துரை, குணசிங்கம், சுவாமிநாதன்.. என்று அக்காலத்தில் கொடி கட்டிப் பறந்த ஜாம்பவானுகளுடன்  இனைந்து அவர்களுக்குச் சளைக்காது பாடி கூத்துலகில்  உயர் இடத்தினை பெற்றார்.

           பூந்தான் யோசேப்புடனான உறவு இவரை தேசிய அளவில் பாராட்டுப்பெறுவதற்கு வழிவகுத்தது எனலாம். மன்னார்  மற்றும் கொழும்பு சரஸ்வதி மண்டபம் போன்றவற்றிலே கூத்துகள் மேடையேற்றப்பட்ட போதும், இலங்கை வானொலியில் பதிவு செய்யப்பட்டு    ஒலிபரப்பப்பட்ட போதும் இவர் பலராலும் பாராட்டப் பெற்றார். பிரபல நாடகக் கலைஞரும் அக்காலத்தில் வானொலி நிகழ்வுகளைத் தயாரித்தவருமாகிய தாசீசியஸ் அவர்கள் கலைமுகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில்  சிறப்பானவர்களாக குறிப்பிட்டுள்ள அண்ணாவியார்களில் இவரது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.

      தனித்துவமும் சிறப்புக்களும்

அண்ணாவியார்  டானியல் பெலிக்கான் அவர்கள் கூத்துலகில் பாராட்டுவதற்கு அவரது பல்வேறு சிறப்புக்களும் காரணமாக உள்ளன. தென்மோடிக் கூத்து மரபில்  பாத்திரங்கள் கையிருப்புத் தன்மை வாய்ந்தவையாகக் கொள்ளப்படுவதுண்டு "ஸ்திரிபாட்","இராஜபாட்" என்றும் "சரித்திரக்காரன்" என்றும் பாத்திரங்களை வகைமை செய்வார்கள். ஸ்திரிப்பாட் என்று அழைக்கப்பெறும் பெண் பாத்திரங்களை எல்லோரும் ஏற்க முடியாது அதற்கான குரல்வாகு உடல் பொருத்தம் நடிப்பாளுமை என்பன இருக்க வேண்டும்." இராஜபாட்" என்பது வீரப்பாத்திரங்களாக இருக்கும் அரசன்,தளபதி போன்ற அவ்வாறான  பாத்திரங்களுக்கு கனமான குரல்வாகும், கல்வெட்டு சிந்து போன்ற பாவினங்களை சிறப்பாக பாட வல்லவராகவும் இருத்தல் வேண்டும்.நாடகக்காரன் பாத்திரங்கள் கதா நாயகன் பாத்திரம். இது பெரும்பாலும் புனிதர்கள் வேதசாட்சிகளாக இருக்கும் காரணத்தினால் சோகமான தருக்களை புனிதத்துவத்துடன் பாடி நடிக்க வேண்டும்.அதற்குரிய உச்சமானதும் கனிவானதுமான குரல்வாகும் இருக்க வேண்டும்.இப்படி ஒவ்வொரு பாத்திரங்களையும் நடிப்பதற்கு சிறப்பான தன்மையுடயவர்களே இவற்றினை நடிப்பார்கள். எடுத்துக்காட்டாக பூந்தான் யோசேப்பு " இராஜபாட்" ஏற்பதே வழக்கம். பக்கிரி சின்னத்துரை "சரித்திர காரன்"  ஆனால் பெலிக்கான் அண்ணாவியாரின் சிறப்பு அவர் எல்லாவகைப் பாத்திரங்களையும் நிகழ்த்த வல்லவராக இருந்தார். அவ்வேடங்களில் மிகவும் புகழ் பெற்று விளங்கினார்.

           விஜயமனோகரன் நாடகத்தில் மனோகரியாகவும், எஸ்தாக்கியாரில் அவரின் மனைவியாகவும், புனிதவதியில், புனிதவதியாகவும் நடித்து பெண் பாத்திரத்திரச் சித்தரிப்பில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளார். அவ்வாறே வீரத்தளபதியில் செபஸ்தியாராகவும் தேவசகாயம் பிள்ளையில், தேவசகாயம் பிள்ளையாகவும் சரித்திரக்காரன் (கதாநாயகன்) பாத்திரங்களைச் சிறப்பாக ஏற்று பாராட்டப் பெற்றிருக்கின்றார். அதேவேளை சங்கிலியன் அலங்காரரூபன், மனம்போல்மாங்கல்யம், போன்ற கூத்துக்களில் இராஜபாட் ஏற்று சளைக்காது நடித்திருக்கின்றார். எந்த வகையிலும் பாடவும் நடிக்கவும் வல்ல அவரது ஆளுமை வியப்புக்குரியதாய் இருந்துள்ளது. எனினும் அவரது சிறப்பு சரித்திரகாரர் பாத்திரங்கள் தான் என்பார்கள். புகழ் பெற்ற கூத்துக்களாகிய எஸ்தாக்கியாரில் எஸ்தாக்கியராக, தேவசகாயம் பிள்ளையில்

தேவசகாயம்பிள்ளையாக, வீரத்தளபதியில் செபஸ்தியாராக, சஞ்சுவானில் சஞ்சுவானாக என்று கதாநாயகர்களாக இவர் நடித்த நாடகங்கள் இவரைப் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன எனலாம். இது ஒரு விசேட ஆற்றலாகும்.

             அதுமட்டுமன்றி சில பாடல்களை தனித்துவமாக பாடுவதற்கு இவரை விட யாருமில்லை என்று கூறுவார்கள். "இசலி" எனப்படும் பாடலை இவர் மிகச் சிறப்பாக பாடுவார் என்று அண்ணாவியார் பேக்மன் ஜெயராஜா குறிப்பிடுகின்றார். வீரத்தளபதியில் செபஸ்தியாரை கள்ளி மரத்தினில் கட்டி அடிக்கும் பாடலான "கட்டிக் கள்ளி நட்டணையாய் துட்ட வேடர்தான் - வில்லில் தொட்டு நெஞ்சைப் பூட்டி அம்பை எய்யப் போகிராரே" என்ற பாடலை இவர் பாடி நடிக்கும் பொழுது சபை கதறி அழும் என்று கூறுவார்கள். அவ்வாறே தேவசகாயம்பிள்ளையில் இவரும் அண்ணாவியார் அல்பிரட் அவர்களும் பாடும் "வாரும் வாரும் நீலம்பிள்ளாய்..." என்ற பாடல் பலராலும் எடுத்துரைக்கப்படுகின்றது. இப்படி சிறப்பான வெளிப்பாடுகளால் கூத்து இரசிகர்கள் மத்தியில் அண்ணாவியார் இன்றும் பேசப்படுகின்றார். எல்லாவற்றுக்கும் மேலாக சாதாரணமாகப் பார்க்கும் போது சாதுவாக அப்பாவி போலத் தோன்றும் இவர் நடிக்கத் தொடங்கினால் "இவரா அவர்"? என்று அனைவரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் அரங்கில் சந்ததம் செய்வார். அந்தளவுக்கு அவரது ஆளுமை அவருக்குள் மறைந்திருக்கும்.

     அண்ணாவியார் நெறியாக்கப் பணிகளில்

கூத்துகளில் நடித்தவர் பின்னர் அதிலே தேர்ச்சி பெற்றவராகி தனது கிராமத்திலேயே கூத்துக்களைப் பயிற்றுவிக்கத் தொடங்கி அண்ணாவியாராகினார்."அண்ணாவியம்" என்பது யாரும் விரும்பினால் பெறலாம் என்று கூற முடியாத உயர் நிலையாகும். பாரம்பரியமான கூத்துக் கிராமங்களில், அப்படி வருபவர் கொப்பி பார்த்து, கூத்துக்களில் நடித்து பாராட்டபெற்று, அண்ணாவியாருக்கு உதவியாளராகப் பணியாற்றி, பாடல்கள் ஆடல்களை சொல்லில் கொடுக்க கூடியவராகி முதிர்ச்சி பெறும் ஒரு கட்டத்தில் ஊர் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் நிலையில் வழங்கப்படுவது. அந்தளவில் நாவாந்துறைக் கிராமம் இதுவரை அண்ணாவியாராக ஏற்று கொண்டாடியது. செபஸ்தியார் உட்பட பல கூத்துக்களை தனது கிராமத்திலே பயிற்று வித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் பரலோக மாதா திருநாளைத்

தொடர்ந்து ஒரு கூத்தினை மேடையேற்றுவதனை வழக்கமாக்கி கொண்டிருந்தார்.

இவரது ஊக்கத்தினால் உருவாகிய இவரது சகோதரன் அமரர் மைக்கேல்ராஜா அவர்களும் சிறந்த கூத்துக்கலைஞராக திகழ்ந்துள்ளார். டானியல் பெலிக்கான் நெறிப்படுத்திய கூத்துக்களில் வேதசாட்சிகள், விஜயமனோகரன், ஜெனோவா, மத்தேசு, மவுறம்மா, சங்கிலியன், ஞானசௌந்தரி, கருங்குயில் குன்றத்துக் கொலை, சாஞ்சுவான், நல்ல தங்காள், புனிதவதி, வீரதளபதி, கண்டி அரசன், தோமஸ் அருளப்பர், விஜய மனோகரன், உசோன் பாலாந்தை, கிளியோ பாட்ரா, இம்மனுவேல்... போன்ற பல கூத்துக்கள் குறிப்பிடத்தக்கவை.

   பிரபலமான பல கூத்துக்களை இவர் நெ றிப்  படுத்தினாலும் தனது கிராமத்தின் பழமையான கூத்துக்களை மீளவும் மேடையிற்ற வேண்டும் என்ற இலட் சியத்துடன், தனது கிராமத்து புலவர்கள் எழுதிய கூத்துக்களையும் மேடையேற்றியுள்ளார். புலவர் மாரியா ம்பிள்ளை எழுதிய உசோன் பாலந்தை”சூசைப்பிள்ளை புலவர் எழுதிய இம்மானுவேல்” கிறிஸ்தோப்பிள்ளை எழுதிய தாமஸ்க் "அருளப்பர்" "எஸ்தாக்கி ஆசிரியர் எழுதிய வீரதளபதி எஸ்தக்கியார் ஞானசௌந்தரி போன்ற கூத்துத்துக்களை கிராமத்தில் மேடையே ற்றி அப்புலவர்களின் பெயர்களை நிலைக்க செய்தமை மிக முக்கியமான ஒரு பணியாகும்.

     அவரது நெறியாக்க பணியின் மிக முக்கியமான பணி இளையொருக்கு கூத்துக்களை பயிற்றுவித்தமையாகும் கிராமத்தில் ஞானசௌந்தரி ஜெனோவா போன்ற  கூத்துக்களை தனியே பெண்களுக்கு பயிற்றுவித்து மேடையெற்றியுள்ளார். அதே போல் இளைஞர் களுக்கும் பல கூத்துக்களை பயிற்றுவித்துள்ளார். நாவாந்துறையில் மட்டுமன்றி கிராமம் கடந்து பூநகரி, அரிப்பு மன்னார் , குமுழமுனை, மெலிஞ்சிமுனை நாரந்தனை, கட்டக்காடு என பல இடங்களிலும் கூத்துக்களை நெறிப்படுத்தியுள்ளார். பாடசாலை மாணவர்களுக்கும் தமிழ்த்தின போட்டிகளுக்காக பல தடவைகள் கூத்துக்களை பயிற்றுவித்து முதலிடங்களை பெற்றுக்கொடுத்துள்ளார். நாவாந்துறையில் றோ. க வித்தியாலயம், மன்னார் புனித சேவியர் கல்லூரி போன்றவை அந்த வகையில் அவரால் புகழடைந்தன. ஒரு கலைஞனின் சிறப்பு என்பது அவன் தான் கற்ற கலையை அடுத்த சந்ததிக்கு கடத்துகை செய்வதிலேயே தங்கியுள்ளது என்பார்கள். அந்த வகையில் அண்ணாவியார் டானியேல் பெலிக்கான் அவர்கள் தனக்கு தெரிந்த கூத்துக்கலையை மிகத் தாராளமாக இளையவர்களுக்கு வழங்கியுள்ளார்.இன்று நாவாந்துறை வடக்கில் இருக்கின்ற பெரும்பாலான கூத்தாடக்கூடிய  கலைஞர்கள் யாவரும் அவரால் நெறிப்படுத்தப்பட்டவர்கள் என்றுதான் கூற முடியும்.இறுதிக் காலங்களில் அவர்  கூத்தினை பயிற்றுவிக்க தயாராக இருந்தும் இளையோர் அக்கறையற்று இருந்ததனை வேதனையோடு ஒரு தடவை பகிர்ந்து கொண்டார். அதேவேளையில் மூத்த கலைஞர்களை மதிக்கின்ற அண்ணாவியாரின் பண்பும் பலருக்கும் முன்னுதாரணமாக காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாக நாரந்தனையை சேர்ந்த மூத்த அண்ணாவியார் அமரர் செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் அலங்காரரூபன்  கூத்தினை  நெறிப்படுத்தி தானும் நடிக்க விரும்பிய போது நாவாந்துறை கலைஞர்களை  ஒன்று சேர்த்து அவருக்கு வழங்கி தான் அண்ணாவியாராக இருந்தும் அவரின் கீழ் நடித்து அலங்காரரூபன் கூத்தினை மேடையேற்றுவித்தார். தன்னுடைய  காலத்தில் வாழ்ந்த மூத்த கூத்தர்களை அவர் என்றும் மிகவும் மரியாதையுடன் அணுகியதனை அறிய முடிகிறது.

 

        சமூக பணிகளில்

 

   அண்ணாவியார் டானியல் பெலிக்கான் அவர்கள் தனியே கூத்துக் கலையுடன் மட்டும் வாழ்ந்தவர் அல்ல. சமூக அக்கறை மிக்க சேவையாளனாகவும்  திகழ்ந்துள்ளார். சமூகப் பணிகளில் ஆன்மீகப் பணிகளில் அக்கறை உடையவராகிய இவர் சிறந்த விளையாட்டு வீரனாகவும் திகழ்ந்துள்ளார்.  அத்துடன் நாவாந்துறை சென்மேரிஸ் முத்தமிழ் மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவரது புதல்வர்களான அமரர் டானியல் அன்ரனி மற்றும் டானியல் ஜீவா, டானியல் சௌந்திரன் ஆகியோர் சிறந்த எழுத்தாளர்களாகவும் மிளிர்கின்றார்கள் என்றால் அதற்கு இவரது ஊக்கமும் ஒரு காரணமாக இருந்துள்ளது.  அத்துடன் தமது ஆலயத்தில் பற்றுள்ளவராகவும் ஆலயக் கடமைகளில் தன்னை  ஈடுபடுத்தியுமுள்ளார். அத்துடன் துக்க இராகங்கள்(ஒப்பாரி போன்றவை), பசாம் பாடல்கள் போன்றவற்றினை மிகச் சிறப்பாக பாடவல்லவராக இருந்த இவர் மரண வீடுகளில் இரவிரவாக அவற்றினை பாடியும், ஆலயங்களில் தபசு காலங்களில் வியாகுலப் பிரசங்கம் எனப்படுகிற  பசாம் பாடல்களைப் பாடியும் அளப்பரிய பணி ஆற்றியுள்ளார். சமூக நேசிப்பு மிக்கவர்களே நல்ல கலைஞர்களாக வர முடியும் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

 

  நிறைவாக...

பாரம்பரியமான கூத்துப்பயில்வுள்ள கிராமத்தில் பிறந்து வளர்ந்து அந்த மரபினை தானுங்கற்று  தன்னை அத்துறையில் ஒப்பாரில்லா வகையில் வளர்த்து கற்று தனை  இளைய சமூகத்திற்கும் கொடுத்து தனது கிராமங் கடந்தும் பணியாற்றி பலராலும் அறியப்பெற்று மிகவும் அமைதியாக விடைபெற்றுள்ள அண்ணாவியார் டானியேல் பெலிக்கான் அவர்கள் கூத்து வரலாற்றில் முக்கிய இடம் பிடித்து நிற்பது நாவாந்துறையின்  நாட்டுக் கூத்து மரபிற்கு ஒரு அடையாளமாக திகழ்கிறது. அவரது  கலைமரபு  தொடர்ந்தும் அக்கிராமத்தில் பேணப்படுவதும் பயிலப்படுவதுமே அவரது ஆத்துமாவுக்கான பிரதிக் கடனாகும்.

 

 

 

 

 

  டானியல் அன்ரனி ( 1947.07.13 - 1994) யாழ்ப்பாணம் , நாவாந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர் , விமர்சகர் , பத்திரிகையாளர். இவர் ஆரம்பத்தில் சிறுகதை...