Friday, August 20, 2021

 

                 டெய்சி 

                                   சிறுகதை

                                     செ. டானியல்ஜீவா

 

அன்றாடம் சாப்பாட்டிற்கே நெருக்கடியான குடும்பச் சூழலில்தான் நான் பிறந்தேன். எனக்கு இரண்டு சகோதரிகள் கல்யாண வயதில் என்னை நம்பியே காத்திருக்கிறார்கள். நான் தினமும் இந்த துயரிலிருந்து விடுபடுவதற்கு வழியில்லையா என்று யோசித்துக் கொண்டு திரிந்த ஒரு நாளில்தான் யேசுநேசன் என்னை அவனுடைய வீட்டிற்கு முதன்முதலில் அழைத்துப் போனான்.

 

வீட்டிற்குள் போனவுடனேயே என்னை அவனுடய அம்மா, அக்கா டெய்சி கவனித்த விதம் எல்லாம் அவர்களுடைய குடும்பத்தின் மீது தீராத அன்பை விதைத்தது. அவர்களுடைய அப்பா தொழிலுக்கு போய்விட்டதாக டெய்சி சொன்னாள். அன்று முதல் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி போய் வருவேன்.

 

டெய்சி நெடுநெடுவென வளர்ந்து உயரமான தோற்றம் கொண்டவள். அதே வேளை மெல்லிய உடல் வாகு. பார்வைக்கு மிக அழகாக இருப்பாள். வெள்ளை நிறமும், பழுப்பு நிறமும் கலந்த உடலில் கழுத்துக்கு வலப்புறமாக ஒரு மச்சம் இருக்கும். டெய்சிக்கு அது ஒரு தனி அழகு. நெற்றிப் புருவம் இரண்டும் மோதும் இடைவெளியில் எப்போதும் கறுப்புக் கலரில் சிறிய ஸ்ரிக்கர் பொட்டு எடுப்பாக இருக்கும். அவளைப் பேரழகி என்றாலும் அதுவும் பொருந்தும்தான்.

 

 

டெய்சி அவளுடைய பெயரின் சுருக்கம். ஊரிலுள்ள எல்லோரும் டெய்சி என்றே அழைப்பார்கள். அவளுடைய பெற்றோர் மட்டுமே அவளை டெய்சி ராணி என்று அழைப்பார்கள். டெய்சிக்கு இரு சகோதரர்கள் இருக்கிறார்கள். இருவரும் டெய்சி மீது அளவற்ற அன்பு கொண்டவர்கள். ஒரு சகோதரன் சுவிஸில் இருக்கிறான். அவன் முன்னால் போராளி என்பதால் டெய்சியின் பெற்றோர் பயத்தினால் வெளிநாட்டிற்கு அவனை அனுப்பி வைத்தார்கள். வெளிநாட்டிற்கு அவனை அனுப்பி வைப்பதற்கு முன்னரே அவர்கள் வசதியான குடும்பப் பின்னணி கொண்டவர்கள். யாழ்ப்பாணத்தில் கடலோரப் பகுதியில் அவருடைய அப்பாவின் பெயரை 'சம்மாட்டி சைமன்' என்று சொன்னால் மீன் பிடித்தல் தொழிலில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அநேகமாக தெரியும்.

 

டெய்சி என்னைவிட இரண்டு வயது மூத்தவள். அவளுடைய தம்பியும் என்னுடைய நண்பனுமாகிய யேசுநேசன் என்னுடன் ஒரு நாள் கதைத்துக் கொண்டு நிற்கும் போது தன்னைவிட தன்அக்கா இரண்டு வயது மூத்தவள் என்று சொன்ன போதுதான் எனக்கு தெரியவேண்டி வந்தது. எனக்கும் யேசுநேசனுக்கும் ஒரே வயது. மாதத்தால் நான் மூத்தவன். நான் டெய்சி என்றுதான் அழைப்பேன். சில வேளையில் டெய்சி அக்கா என்றும் அழைப்பேன். அப்படி நான் அழைக்கின்ற தன்மை என்னுடைய மனநிலையைப் பொறுத்தது என்று வெகு விரைவிலேயே உணரந்து கொண்டுவிட்டேன்.

 

ஒரு நாள் டெய்சி வீட்டிற்குப் போயிற்று வீட்டை விட்டு வெளியேறும் போது யேசுநேசன் என்கூடவே வாசல் வரை வந்தான். திடீரென என்னைப் பார்த்துக் கேட்டான்... 'என்னட மரியான் இன்னைக்கு வீட்டிற்கு வந்ததிலிருந்து பலமான யோசனையில்... எனக்கு எதையோ மறைக்க நினைக்கிற போல தெரியுது. என்னதான் பிரச்சினை உனக்கு? என்னால் முடிந்தால் உனக்கு உதவி செய்வேன். என்னைப் பத்தி உனக்குத் தெரியும்தானே. எதையும் மனசில் போட்டுக் குழப்பாதே' என்றான்.

 

'என்னை மதிச்சு பழகிறவன் நீ. உன்னட்ட மறைச்சு என்னத்த நான் காணப்போறன். என்ர மண்டையே வெடித்துவிடும் போல இருக்குதடா, இனியும் மறைக்க முடியாது தான். என்னுடைய குரல் தளர்ந்தது.

 

உடைந்த குரலில் 'எ.எல்லில் நான் சித்தி பெற இல்லை என்டு உனக்குத் தெரியும்தானே. இரண்டாம் தடவை எடுக்கலாம் என்டால் எங்கள் வீட்டில் பொருளாதார வசதியும் இல்லை. ஏதாவது ஒரு வெளிநாட்டுக்குப் போவதாக இருந்தாலும் பணம் இல்லை. இங்கே ஏதாவது ஒரு வேலை பெறுவது என்பது மிகவும் கடினமானதாக இருக்குது. எனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை எப்பவோ இழந்துட்டன். இந்த வருடத்திற்குள் ஒரு அக்காவுக்காவது திருமணம் செய்து வைக்கவேண்டும். நல்ல இடத்தில் சம்மந்தம் சரி வந்தாலும் திருமணம் செய்து வைக்க வழியற்ற நிலை. ஆனால் இவ்வளவும் இருக்க எங்களுடைய வீட்டில் என்னை ஏதாவது ஒரு வெளிநாட்டுக்குப் அனுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். நான் என்ன செய்வது என்று புரியாமலே நாள் போகுது. ஏதாவது வழி தெரிந்தால் சொல்லன் யேசுநேசன்' என்றேன்.

 

அவன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டு ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தான். மீண்டும் அவனே சொன்னான்

'எதையும் மனசில் போட்டு குழப்பாமல் இரு. எதுக்கும் நாளைக்கு நாம சந்திப்போம் என்று சொல்லி விட்டு அவன் வீட்டிற்கு உள்ளே போய்விட்டான்.

 

நான் அடுத்த நாள் மதியம் போல யேசுநேசனை சந்திப்பதற்காக அவனுடைய வீட்டுக்கு வந்து வீட்டின் சுவரின் ஓரத்தில் சயிக்கிளை சாத்திவிட்டு உள்ளே போனேன். போகும் போதே டெய்சி என்னைக் கண்டு விட்டாள். ஓடிவந்து 'வாட மரியான்' என்று சொல்லிக்கொண்டே குசினிப் பக்கமாக நகர்ந்து மீண்டும் வந்தாள். என்னைப் பார்த்துக் கொண்டே கதிரையைக் காட்டி உட்காரச் சொன்னாள். நான் மெதுவாக உட்கார்ந்தேன். அவளும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தாள்.

 

மெல்லிய ஒடுங்கிய முகம் மகிழ்ச்சியில் பளிச்சென்று பிரகாசமா இருந்தது. நடு உச்சி கிழித்து நீண்ட கறுத்த தலைமுடியை அள்ளிக் கோர்த்து மேல்நோக்கிக் கொண்டை போட்டிருந்தாள். உருகாத மெழுகு போல் அவளுடைய கழுத்து வசீகரமாக இருந்தது. அவள் அப்படியே அவளுடைய அம்மாவின் சாயலில் இருந்தாள். நீலக்கலரில் வெள்ளைப் பொட்டு போல் விழுந்த சட்டை அணிந்திருந்தாள். கழுத்திலிருந்து வீ வடிவில் வெட்டப்பட்ட சட்டையில் கறுப்புக் கலரில் உருட்டி தைத்து போடர் போட்டிருந்தது. வீ வடிவில் தைக்கப்பட்ட கழுத்துச்சட்டையைச் சுத்தி நீல நிறத்தில் வேலைப்பாடுகள் அதில் இருந்தது. அது அவளுக்கு மிக நேர்த்தியாகவும், அழகாகவும் இருந்தது. யன்னலினுடே சரிந்து வரும் வெளிச்சக் கோடுகள் கூந்தல் நெளிவில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்து. ஒரு மெல்லிய நூல் போல தங்கச் சங்கிலி கழுத்தில் முத்தமிட்டபடி கிடந்தது.

 

'வீட்டில் யாரும் இல்லையா...? யேசு எங்க போய்ற்றான்... அம்மா, அப்பா...?'

 

'எல்லாரும் வெளியில் போயிற்றீனம்... அம்மாவும் அப்பாவும் யாழ்ப்பாண டவுனுக்கு. தம்பி சந்தைக்கு மாட்டிறைச்சி வாங்கப் போய்ற்றான். இப்ப அவன் வந்திருவான். அதுவரையும் இரன்ரா... நான் தேத்தணீயை போட்டிட்டு வார்றன் என்று சொல்லிப் போட்டு குசினிப் பக்கமாகப் போனாள். நான் கதிரையிலிருந்தபடி சுவரில் மாட்டப்பட்ட புகைப்படங்களைப் பார்த்தேன். உட்சுவரின் பக்கமாக இருந்த முற்றத்தில் மண்சாடியில் விதம் விதமான குரோட்டன் செடிகள் வைக்கப்பட்டிருந்தன. மல்லிகை மரமொன்று வாசற் சுவரின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரை வளைந்து கிடந்தது. நிறைய மல்லிகை பூத்திருந்தது. சின்னதாக ஒரு செம்பருத்தி. அந்த மரத்திலிருந்து சில மொட்டுக்கள் அவிழ்ந்து பூத்திருந்தது. அந்த மண் மீது ஊறிக்கிடந்த ஈரத்தைப் பார்த்த போது சற்று முன்புதான் எல்லாவற்றுக்கும் தண்ணீர் ஊற்றியிருப்பார்கள் போல் தெரிந்தது. சுவரின் உட்பகுதிக்கும் வெளிப்பகுதிக்கும் வர்ணம் பூசப்படிருந்தது. சுவருக்கு நீல வர்ணத்திலும், சுவரின் மேல் பக்க விளிம்பில் வெள்ளை வர்ணமும் பூசப்பட்டிருந்தது. இந்த இரண்டு வர்ணத்தையும் பரலோக மாதாவின் அடையாளமாக எங்கள் ஊரில் சொல்லிக் கொள்வார்கள். ஒரு பத்து நிமிடம் கூட கழிந்து இருக்காது அவள் பால் தேத்தண்ணியோட வந்தாள். ஒரு கப்பை எனக்குத் தந்து விட்டு மறு கப்போடு அவள் நாட்காலியில் உட்காந்தாள். ஒரு குறு குறுப்போடு இருந்தவளின் முகத்தை ஏனோ கவனித்தேன்.

 

இவ்வளவு வசதியோடும், அழகோடும் பிறந்து வளர்ந்த டெய்சிற்கு மூன்று முறைகள் கல்யாணம் பேசப்பட்டுச் சரிவராமல் போனது ஏன்? வியப்பாக இருக்கிறது. இரண்டு முறை அவளுடைய பெற்றோர்கள் விருப்பங்கள் இல்லை என்று கூறி நிராகரித்தார்கள். ஒரு முறை டெய்சி தன்னோடு கல்லூரியில் கல்வி பயின்ற பொடியனை கேட்டு வந்த போது அவள் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறி நிராகரித்து விட்டாள். அவனை தனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லியதற்கு பிரதான காரணம் படிக்கிற காலத்தில் அவனுடைய கெட்ட பழக்கவழக்கங்களை அவள் நன்கு அறிந்திருந்ததே. நல்ல பொடியனாக திருமணம் கேட்டு வந்தால் அவளுக்கு செய்து வைக்கலாம் என்ற எண்ணத்தோடு பெற்றோர் இருப்பதாகவும் யேசுநேசன் சொல்லித்தான் எனக்குத் தெரிய வேண்டி வந்தது.

 

'என்ன யோசனையில இருக்கிற...' என்று சொல்லியபடி ஒரு முறை தேத்தண்ணிய உறிஞ்சி குடித்தாள். மேல் உதடும் கீழ் உதடும் பவ்வியமாக அசைந்து கோப்பிக் கப்பைத் தழுவியது. அவள் ஒரு முறடு குடித்தவுடன் மெல்ல உதடுகள் விலகி வந்தது. சுங்கான் மீன் மேல் கடல் தண்ணீர் போல் பால்த் தேத்தண்ணீ உதட்டின் மீது ஒரு துளிஒட்டிக் கிடந்தது. இடது கையை எடுத்து நாற்காலியின் இடது பக்க கைப்பிடியில் அந்தக் கைப்பிடிக்கு வலிக்காத மாதிரி வைத்தாள். வஞ்சனையில்லா முகத்தில் ஒரு குழந்தைத் தனம் வழிந்தோடியது. கண்களிலிருந்து ஒரு இனம் புரியாத ஒளி என்னை நோக்கி மெல்ல மெல்ல கசிந்து வருவதை உணர்ந்தேன். என் யோசிப்பை அவள் குரல் நிறுத்தியது...

 

'நீ என்னடா பெரிய மனுசன் மாதிரி யோசனையிலா திரியிற' வார்த்தையில் கண்டிப்புடன் கரிசனை வெளிப்பட்டது.

 

'யாரு உன்னுடைய தம்பி சொன்னானா?'

 

'ஏன் உன்ர மூஞ்சியைப் பார்த்தாலே தெரியுதே' அவளே தொடர்ந்து... 'என்னதான் உன்ர பிரச்சினை... வீட்டில் கஷ்டம். அந்தக் கஷ்டங்களை நீக்க ஏதாவது ஒரு வகையில் வழி பண்ணவேண்டும். அவ்வளவுதானே. இதுக்குபபோய் மண்டையைப் போட்டு உடைத்துக்கொண்டு இருக்கிற. ஒன்று வேலை செய்ய வேணும், இல்ல யென்றால் வெளிநாட்டுக்குச் செல்ல வேணும் அப்படித்தானே?'

 

நான் ஆமோதிப்பது போல் தலையை அசைத்தேன்.

 

'இப்படியே மண்டையை மண்டையை ஆட்டியபடி மனசுக்குள்ள பிரச்சினையை வைச்சுக்கொண்டு யாருக்கும் சொல்லாமல் திரி... சுவிசில இருக்கிற எங்கட அண்ணன் நல்லவர். உன்னைப் பத்தி விபரமாகக் கடிதம் எழுதிப் போட்டிருக்கிறன். தம்பியும் போன கிழமை கொழும்புக்குப் போனபோது ரெலிபோனில உன்ன பத்தி சொல்லியிருக்கிறான். நீ ஒன்டுக்கும் பயப்பிடமா கொழும்புக்குப் போய் பாஸ்போட் எடுத்தால் மட்டும் போதும், அண்ணன் மேற்கொண்டு பயண ஏற்பாடுகளைக் கவனிப்பார். நீ வெளிநாட்டிற்குப் போய் உழைச்சு உங்கட இரண்டு அக்காவின்ர திருமணத்தையும் முடிச்சுப் போட்டு, எடுத்து விட்ட காசை மட்டும் குடுத்தால் சரி அவ்வளவும்தான். மேற்கொண்டு நீ என்ன விருப்பமோ அப்படியே நீ நடந்த கொள்ளு'.

 

'ம்... என நீட்டி இழுத்தேன்'.

 

'ஏதாவத சந்தேகம். சொல்லு...?'

 

'இல்ல ஒண்ணுமில்ல'

 

'பரவாயில்லை சொல்லு'

 

'கொழும்புக்கு போறதுக்கோ, பாஸ்போட் முடிக்கிறதுக்கோ எங்கிட்ட பணம் இல்லயக்கா'.

 

'அதெல்லாம் ஒரு பிரச்சினையில்ல நாளைக்கே கொழும்புக்கு போறதுக்கு ஆயத்தப்படுத்து. எங்கட அம்மாவே காசு தருவா. தம்பி யாழ்ப்பாண பஸ்டான்டில் கொண்டு போய் ஏத்தி விடுவான். கவனமாக போயிற்று வா. ஆனையிறவைத் தாண்டும் போது முன்னுக்கு ஆமியின்ர செக்கின் பொயின்ரும், அங்கால இயக்கதின்ர சென்றிப் பொயின்ரும் இருக்குதென்டு தம்பிதான் சொன்னவன். நீ பயப்படாமல் போயிற்று வா...'

 

மீண்டும் நான் வாஞ்சையோடு அவளை பார்க்க...

 

'என்னட. மீண்டும் சந்தேகம்...?'

 

'இல்ல...'

 

'அப்ப...?'

 

'பயம். நாளைக்கு புதன் கிழமை...'

 

'புதன் கிழமை என்டால் அதுக்கு என்ன...'

 

'எனக்கு 'சாம்பல் புதன் கிழமை' தான் ஞாபகத்தில வருகுது... சாம்பல் புதன் கிழமையன்டுதான் யுதர்களான பரிசேயர், சதுயேர், வேதபாரகர் எல்லாரும் சேர்ந்து யேசுவை கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்த நாளல்லவா'.

 

டெய்சி மிகச் சதாரணமாக சிரித்துக் கொண்டு... 'அப்படி உனக்குப் பயமாக இருந்தால் சொல்லு நானும் உன் கூட வாறன்' என்றாள்.

 

அவள் சொல்வதைக் கேட்டு அப்படியே உறைந்து போனேன். சற்று நேரம் ஏதுவுமே பேசாமல் இருந்து விட்டு... 'உங்களுக்கு பெரிய மனசு. எப்படி நன்றி சொல்வதென்றே தெரியல் நன்றி அக்கா... இவ்வளவு துணிச்சல் காரியாக இருக்கிறீங்களே... எப்படி உங்களுக்கு இப்படியெல்லாம் துணிச்சல் வந்தது?' என்று கேட்டேன்.

 

'அதூவா... எல்லாம் அம்மாவிடமிருந்துதான். அம்மாவும் அப்பாவும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவங்க ஒன்னாம் வகுப்பிலயிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்னாப் படிச்சவங்க. இரண்டு பேரும் விரும்பியிருக்கிறாங்க, ஆனா அப்பா வீட்டருக்கு விருப்பமில்லை. அம்மா சாதியில குறைஞ்சவங்க என்டும், வசதியில்லாதவங்களென்டும் அப்பாவுடைய வீட்டார் அவங்கட காதலை ஏற்றுக்கொள்ள மறுத்திட்டாங்க. ஆனா அப்பா அம்மாவைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறார். அப்பா சரியான பயந்தாங் கொள்ளி. வீட்டாரின் விருப்புக்கு மாறாக முடிவெடுப்பதில் குழப்பநிலையில் இருத்திருக்கிற சமயத்தில்தான் அம்மாவின் நெருங்கிய நண்பிக்கும் அப்பாவினுடைய நெருங்கிய நண்பனுக்கு இடையே அப்போது காதல் ஒடிக்கொண்டிருந்தது. எல்லாரும் ஒரே வகுப்பில் தான் ஒன்றாகப் படித்தவங்க. இருவரும் சேர்ந்து அப்பாவிற்குச் சப்போட் பண்ண, அப்பாவை ஒரு நாள் காலையில கரையூருக்கு கூட்டிக் கொண்டு அம்மா போயிற்றார். அப்பாவின் குடும்பமே கொந்தளித்தது. மிஞ்சிப்போனால் நான்கு மாதம்தான் அம்மா கற்பம் தரித்தவுடன் அப்பாவின் வீட்டாரே கரையூருக்குப் போய்க் கூட்டிக் கொண்டு வந்து விட்டார்கள். அப்பா நல்ல கடல் தொழிலாளி. இரவு பகல் என்று பராமல் யாருடைய உதவியும் இல்லாமல் கடினமாக உழைத்தார். களங்கண்ணி வலை இழுக்கப் போறது, விடுவலைக்கு போறது, சில வேளையில் தொழிலால நேரத்துக்கு வந்திட்டார் என்றால் கடல் அட்டை புறக்கப் போவார். அப்படி உழைச்சுத்தான் நாங்க இந்த நிலமைக்கு வந்திருக்கிறோம். அப்பாவே நல்ல உதாரணம் எங்களுக்கு. ஏன் உனக்கும் எங்க அப்பவே உதாரமாக இருக்கக்கூடாது...? எவ்வளவு வசதியோடும் எங்கள் குடும்பம் வாழந்தாலும் அறச்செயல் இல்லையேல் அந்த வாழ்கைக்கு அர்த்தமில்லையென்று நினைக்கிற குடும்பத்தில் பிறந்திருக்கிறேன். கருணைக்குப் பதிலாக காட்டுமிராண்டித்தனமாக இருப்பதால் நாம என்னத்தை கண்டடையப் போறம். மற்றவர்களுக்கு கொடுத்து வாழ்வதில் எவ்வளவு மகிழ்சி இருக்கிறது தெரியுமா மரியான்'.

 

நான் ஏதுவே பேசாமல் அவள் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தேன். இன்னும் யேசுநேசன் வருகிற மாதிரி தெரியல.

 

நாளைக்கு கொழும்புக்கு போறதுக்கு ஏற்ப்பாடுகள் வேற செய்ய வேண்டும். மனசு ஒரு வகை இருப்புக் கொள்ளாமல் அலையத் தொடங்கியது. எனக்கு இதுவரையில் யாருடனும் காதல் இல்லை அப்படி ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய சூழ்நிலை வந்திருந்தாலும் என்னுடைய மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. என்னுடைய நினைப்பு முழுவதும் எங்களுடைய குடும்பத்தை பற்றியதாகவே இருந்துள்ளது. டெய்சி சொல்வது போல ஏன் செய்யக் கூடாது?. வெளிநாட்டு விடயம் குறித்து என் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையிலும், அக்கறையிலும் தானே இப்படிச் சொல்கிறார். அது சரிதான் என்று ஒரு கனம் மனம் உறுதி கொண்டது. வெளிநாட்டு விடயம் சரி வந்தால் என்னுடைய குடும்பத்தில் இருக்கின்ற கஸ்டம் எல்லாம் தீர்ந்து விடும் அதன் பிறகு என்னுடைய எதிர் காலம் குறித்து முடிவும் எடுக்கலாம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

 

'நான் போய்ற்று வாறன்' என்று சொல்லி விட்டு வாசல் வரை வந்தேன். அவள் வாசல் வரை வந்து 'கவனமாக போய்ற்று வா ஏதும் உதவி என்றால் சுவிசில இருக்கிற அண்ணன் கிட்ட கேளு. போன் நம்பரை தம்பியட்ட மறக்கமால் வாங்கிக் கொண்டு போ' என்றாள். நான் ஓம் என்று சொல்லிக் கொண்டு சயிக்கிளை ஓடத்தொடங்கினேன்.

 

அவளுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் என் மனதில் ஊறிக் கொண்டிருந்தது. நான் வீட்டிற்க்கு வந்ததும் அம்மாவிடம் டெய்சி சொன்ன விடயம் பற்றி சொன்ன போது அம்மா சந்தோஷபட்டார்.

 

நான் காலையில் எழுந்து குளித்து வெளிக்கிட்டுக் கொண்டு வெளி வாசலுக்கு வரவும் யேசுநேசன் எங்களுடைய வீட்டிற்கு வரவும் சரியாக இருந்தது. எங்களுடைய வீட்டு வாசல் வரை வந்து நின்ற என்னுடைய குடும்பத்தாருக்கு போய்ற்று வாறன் என்று சொல்லி விட்டு யேசுநேசனின் சயிக்கிளில் ஏறினேன். வீட்டு வாசலில் நின்ற என்னுடைய குடும்பத்தாருக்கு கையை காட்ட யேசுநேசன் சயிக்கிளை ஒடத் தொடங்கினான். சயிக்கள் வேகமாக சென்றது. நாலு சந்தியைத் தாண்டி ஐஞ்சு சந்தியைத் தாண்டும் போது ஒரு பிளஸ்ரிக் சொப்பிங் பையைக் காட்டி 'இது உன்னட்ட கொடுக்கச் சொல்லி அக்கா தந்து விட்டவ' என்றான்.

 

நான் 'என்னடா உள்ளே இருக்குது' என்று அறியும் ஆவலோடு கேட்டேன்.

 

'நேற்று எங்கட வீட்டில கச்சான் அலுவாய் சுட்டவிய அதில உனக்கு கொஞ்சம் எடுத்து வைச்சவ, அதைத்தான் இப்ப தந்துவிட்டவ' என்றான்.

 

சயிக்கிள் யாழ்ப்பாண பஸ்ரான்டிற்கு வந்து விட்டது. கொழும்புக்கு புறப்பட காத்திருந்த பஸ்சுக்குப் பக்கத்தில் நாங்க இருவரும் வந்து விட்டோம். கையில் வைத்திருந்த பிளாஸ்ரிக் சொப்பிங் பையை என்னிடம் தந்தான். அதை நான் கொண்டு வந்த தோல் பையுக்குள் செருகி வைத்து விட்டு சிப்பை இழுத்துப் பூட்டி விட்டு நிமிர்ந்த போது அவன் சேட்டுப் பைக்குள் காசையும் ஒரு வெள்ளைப் பேப்பரில் எழுதிய ரெலிபோன் நம்பரையும் வைத்தான். டெய்சிதான் இவற்றை கவனமாக யேசுநேசனிடம் கொடுத்து இருப்பாள் என்று ஒரு கணம் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். நான் நன்றி சொல்லிக் கொண்டு பஸ்சுக்குள் கையை அசைத்துக் கொண்டு ஏறினேன்.

 

கொழும்பு நோக்கிப் புறப்பட்டது பஸ்.

 

நான் பின்னேரம் ஐந்து மணிபோல் கொழும்பு வந்து சேர்ந்து விட்டேன். அடுத்த நாள் காலையில கடவுச்சிட்டு எடுப்பதற்காக பாஸ்போட் அலுவகத்திற்குச் சென்று அலுவலை முடித்து விட்டேன். அங்கேயிருந்தே பெட்ரா இரயில் நிலையத்திற்கு வந்தடைந்தேன். பெற்ற ரயில் நிலையத்துக்கு முன்பாக இருந்த உடுப்பு கடைக்குச் சென்று இரண்டரை மீட்டர் துணி ஒன்றை டெய்சிக்கும், பற்றிக் துணியில் தைத்த இரண்டு சட்டையை என்னுடைய அக்காளுக்கும் வாங்கிக் கொண்டு செட்டியார் தெருவிலிருந்த சாப்பாட்டு கடைக்கு வந்து சாப்பிட்டேன். பின் தங்கியிருந்த விடுதிக்கு வந்து சேர்ந்தேன். கையில் இருந்த மீதி பணத்தில் இரண்டு நாட்கள் லொட்சில் தங்கி இருந்த இரண்டு நாள் வாடகையாக 80 ரூபாயை கொடுத்துவிட்டு அறையிலிருந்த தரையில் மெதுவாகச் சரிந்தேன்.

 

அடுத்த நாள் காலையிலேயே பெட்ரா சென்று ரயில் எடுத்து பின்னேரமே யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து விட்டேன்.

 

அடுத்த நாள் மதியம் போலவே டெய்சி வீட்டிற்கு வந்தேன் நான் உள்ளே வந்ததும் டிவி பார்த்துக் கொண்டிருநந்த டெய்சி 'வாட மரியான்' என்று வரவேற்றாள். நான் நாற்காலியில் உட்காந்து கொண்டு வீட்டைச் சுற்றி பார்த்தேன். யேசுநேசன் வீட்டில் இல்லை. அவருடைய அம்மா அப்பா அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

 

ரிமோட் கொண்ட்ரோல எடுத்து விரலை அழுத்தி ஓடிக்கொண்டிருந்த படத்தை நிறுத்தினாள். என்னோடு கதைப்பதற்கு வசதியாகவே அப்படி செய்தாள் என்று நான் நினைத்துக் கொண்டேன்.

 

'மரியான் எப்படியடா கொழும்புப் பயணம் போயிட்டு' என்றாள்.

 

'பரவாயில்லை. ஒரு கிழமையாலே வீட்டுக்கு பாஸ்போட்டை அனுப்புறன் எண்டு சொன்னாங்க'.

 

'சுவிசில இருக்கிற அண்ணனோடு டெலிபோன்னில்ல கதைச்சனியா?'

 

'ஓம். அவர் சொன்னார் இந்த மாதத்துக்குள் சரிவருமாம். சுவிசுக்கு வந்த பிறகு தன்னோடுதான் இருக்கட்டுமாம் வேலையும் எனக்கு எடுத்துத் தருவாரம். எடுத்து விட்ட காசைப் பத்தி யோசிக்க வேணாமாம். சுவிசுக்கு வந்து உழைச்சு ஆறுதலாக தந்தால் போதுமாம் என்று சொன்னார். உங்க அண்ணனும் உங்களைப் போலத் தான் அன்பாகவும், நிதானமாகவும் கதைக்கிறார். அவர் நல்லவர் போல இருக்கு...'

 

'அதில் என்ன சந்தேகமடா... அவர் என்னைவிட நல்லவர்'.

 

'அக்கா உங்களோடு கதைக்கும் போது வார்த்தையை அளந்தளந்து போடவேண்டும்' என்றேன்.

 

'அப்படி ஒன்டுமில்லையட. என்னப் பார்த்து பயப்படுகிறதை உடன நிறுத்தடா மரியான்'.

 

நான் சிரித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டேன்.

 

இன்னொரு நாள் யேசுநேசனையும் கூட்டிக் கொண்டு யாழ்ப்பாண ரவுனுக்கு போவதற்காக டெய்சியின் வீட்டிற்கு காலையிலேயே வந்துவிட்டேன். வீட்டில் டெய்சியின் அம்மாவைத் தவிர யாரும் இருப்பதற்குரிய எந்தச் சத்தமும் கேட்கவில்லை. வழமையைவிட டெய்சியின் அம்மா சோர்ந்திருந்தார். காரணம் புரியாமல் தடுமாறினேன். வழமையான எந்த உட்சாகமான வரவேற்பையோ சிரிப்பையோ டெய்சியின் அம்மாவிடமிருந்து காணவில்லை. எனக்கு இனம்புரியாத பதட்டம் தொற்றிக்கொண்டது. ஏதாவது நடந்திருக்கலாம் இன்று தோன்றியது.

 

'வீட்டில் யாரும் இல்லையா அம்மா' என்றேன்.

 

தயங்கிக் தயங்கி குரல் உடைந்து வார்த்தைகள் உதிர்ந்தன...

 

'டெய்சி ராணிக்கல்ல ராத்திரியில்லயிருந்து காய்ச்சல் என்டு கிடக்கிறாள். ராத்திரி பூராவும் அனுங்கிக் கொண்டு கிடந்தாள். நான் பனடோலும், கோப்பியும் ராத்திரி போட்டுக் கொடுத்தனான். விடிஞ்சாப்புறவு பார்க்கலாம் மென்னு விட்டுட்டேன். இப்ப என்னும் காய்ச்சல் கூடிச்சு. இவரும் மகனும் தொழிலுக்கு நேத்தே போயிற்றுனம். அவிய எப்பை வருவினமோ தெரியாது. அதுவரையிலும் பிள்ளையைக் காட்டாமல் வைத்து இருக்கேலாது. அவளை பிறைவேற் கொஸ்பிற்றலில காட்டுவதுக்குத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன் தம்பி' என்று கெஞ்சும் குரலில் சொன்னர்.

 

'எனக்கு ஒரு அலுவலும் இல்லையுங்க... டெய்சி என்னோட வர விரும்பினால் நான் கூட்டிக் கொண்டு போறன்' என்றேன்.

 

என்னுடைய குரல் கேட்டுதோ அல்லது இயல்பாகவோ தெரியவில்லை அவள் எழுந்து மெல்ல மெல்ல நடந்து வெளி விறாந்தைக்கு வந்தாள். உடல் பரவைக்கடலில் எடுத்த கடல் அட்டையை தோணியின் வங்குக்குள் போட்ட பிறகு தெரியும் தோற்றத்தில் சுருங்கி கறுத்திருந்ததாள். இரவு முழுவதும் தூங்காமல் இருந்திருப்பாள் என்று நினைக்கிறேன் அவளுடைய கண்கள் கூனி இறாலின் முன் பக்கத்தை உடைக்கும் போது தெரியும் நிறத்தில் கிடந்தது. உதடுகள் காய்ந்தூண்டல் தொழில் செய்யும் வள்ளம் போல் கிடந்தது... சுவரின் ஒரத்தில் அவளுடைய தலையைச் சாய்த்தபடி சோர்வாதமாக நின்றாள். கறுப்பு ஒட்டுப் பொட்டு கீழ் நோக்கி இந்தா விழப்போறன் என்று சொல்லிக் கொண்டிருப்பது போல இருந்தது. தலைமுடி பக்க வாட்டில் சரிந்து குலைந்து தூங்கியது. காதிலிருந்து வெள்ளைக் கல் தோடு பளிச்சென்று தெரிந்தது. கழுத்தில் வழமையாக போட்டிருக்கும் மெல்லிய சங்கிலியும், இரண்டு கைகளிலும் இரண்டு பவுன் காப்புகளும், இரண்டு பக்க மோதி விரல்களில் இரண்டு மோதிரமும் அணிந்திருந்தாள். வலது கையை எடுத்து இடது கையின் மேல் வைத்துக் கொண்டு ஏதோ யோசித்துக் கொண்டு விரல்களைத் தடவி நகங்களைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். நான் கொழும்பிலிருந்து வாங்கி வந்து டெய்சியிடம் கொடுத்த துணியில் அவள் சட்டை தைத்துப் போட்டிருந்தாள். நான் ஒரு கணம் விக்கிற்று போனேன். நான் வாங்கிக் கொடுத்த துணியில் இப்படி எல்லாம் வேலை பாடுகள் செய்து சட்டை தைத்துப் போடுவாள் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. அவ்வளவு அழகாக இருந்தது. பெட்டிக் கழுத்து யோர்க் வெட்டி பொருத்தித் தைத்திருந்த சட்டையின் கீழ்ப் பகுதியில் சின்னப் பெட்டிச் சுருக்கும், முன் திறப்பும் வைத்து இருந்தது. முன் திறப்பிலிருந்து மேல் இருந்து கீழ் நோக்கி மூன்று வெள்ளை நிறத்தில் பொத்தான்கள் வைத்துத் தைத்து இருந்தது.

 

சுவரின் மீது தலையைச் சாய்த்துக் கொண்டு நிற்க பலம் இல்லாமல் வாடி வதங்கிய முகத்தோடு கொஞ்ச நேரம்தான் அவள் அப்படி நின்று விட்டு; உள்ளே சென்று உடையை மாற்றிக் கொண்டு வெளியில் போவதற்காக வந்தாள். நான் முன்னுக்கு போக அவள் பின்தொடர்ந்து எதுவும் பேசாமல் வந்து என்னுடைய சயிக்கிளில் ஏறிக் கொண்டாள். நான் அவளுடைய உடம்புக்கு நோகதபடி சயிக்கிளை மிதித்தேன். சயிக்கிள் மனோகராத் தியேட்டருக்கு முன்னால் இருந்த தனியார் மருத்துவமனையை நோக்கிச் சென்றது.

 

தனியார் மருத்துவமனையின் முன் பக்கத்தில் அவளை சைக்கிளில் இருந்து இறக்கி விட்டேன். நாங்கள் இருவரும் உள்ளே நுழைந்த போது முன்மண்டபத்தில் நோயாளிகளும் நோயாளிகளை கூட்டிக்கொண்டு வந்தவர்களாலும் நிறைந்திருந்தது. இருப்பதற்கு நாற்காலிகள் மிகக் குறைவாகவே இருந்தது. அவள் வரிசையில் இருந்து காட்டும் வரையில் காத்திருக்க பொறுமையற்று நான் மெல்ல அவளுடைய காதில் விழும்படியாக 'டெய்சி சீனியட கடைவரையும் போய்யிற்று வாரன்' என்று சொல்ல அவள் 'ம்' என்று தலையாட்டினாள்.

 

நான் கீழ் நோக்கி படிக்கட்டு வழியாக இறங்கினேன். சயிக்கிளை எடுத்து ஓடத் துவங்கும் முன் அவளை திரும்பி பார்த்து விட்டு சயிக்கிளை மிதித்தேன். என்னையும் அறியாமல் அவளை மீண்டும் திரும்பிப் பார்த்தேன். ஏன் பார்த்தேன்...? எனக்கு புரியவில்லை.

 

நான் சீனியின்ர தேத்தண்ணி கடைக்கு வந்து ஆறுதலாக இருந்து டீயும் வடையும் சாப்பிட்டேன். கிட்டத்தட்ட கடைக்குள் நேரத்தை போக்காட்டிக் கொண்டு இருந்தேன் என்றே சொல்லலாம். ஒரு மணித்தியாலங்கள் வரை இருந்தேன். அதன் பின் டெய்சிக்கு இரண்டு மசால வடையும், சம்பலும், போலியும் வாங்கிக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு வந்தேன்.

 

டெய்சி டாக்டரிம் காட்டி போட்டு வெளியில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு எனக்காக காத்திருந்தாள். என்னவோ தெரியவில்லை என்னைக் கண்டதும் மெல்லிய சிரிப்பை உதிர்த்தாள். நான் கூட்டிக் கொண்டு வரும் பொழுது இருந்த அவளுடைய நிலையைவிட இப்போது உடல் நிலை கொஞ்சம் தேறி இருப்பதுபோல் எனக்கு தெரிஞ்சது. அவள் என்னைக் கண்டதும் என்னை நோக்கி இறங்கி வந்தாள். அவள் என் சைக்கிளுக்கு கிட்ட நெருங்கியதும் 'இப்போ எப்படி உடல் நிலை இருக்குது' என்று கேட்டேன்.

 

'முதல் இருந்ததைவிட பரவாயில்லை. தண்ணீ மருந்து குடிக்க தந்தவர். ஊசியும் போட்ட பிறகு இப்போ கொஞ்சம் சுகமாக இருக்குது. கள்ளப் பயலே என்ன விட்டுபுட்டு சாப்பிட்டுட்டா வந்திருக்கிறாய்' என்றாள்.

 

'உனக்கும் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறன் என்று சொல்லிக்கொண்டு கையில் இருந்த சாப்பாட்டு பேக்கை கொடுத்தேன். அதுதானே பார்த்தேன், எனக்கு வாங்காமல் எப்படி சாப்பிடுவாய்? என்று சொல்லிக் கொண்டு கையில் இருந்த பேக்கை வாங்கினாள்.

 

என்னுடைய சைக்கிளில் ஏறியதும் கொஞ்சம் விரைவாக ஓட்டத் தொடங்கினேன்.

 

வெளியில் சுட்டெரிக்கும் வெயிலோடு ஒரு வகை உவர் காற்றின் வீச்சு. டெய்சி குடையை பிடித்து மேல்நோக்கி விரித்தாள். அந்த சுருக்குக் கூடை மேல்நோக்கி என் முகத்தில் உரசிக்கொண்டு சென்றது. நான் குடைக்கு வெளியே மெல்ல என் உடலை சரித்தேன். அவள் மீண்டும் பின் பக்கமாய் குடையை திருப்பி என்னுடைய உடலையும் வெயிலில்படாதபடி பிடித்துக் கொண்டு 'உனக்கும் சேர்த்துத்தான் இந்தக் குடையை பிடிக்கிறேன்' என்றாள். நான் எதுவும் பேசாமல் அமைதியாக ஒரு உறை நிலையில் சைக்கிளை ஓடிக் கொண்டிருந்தேன்.

 

என் பக்கம் தன் முகத்தை சாய்த்து வைத்து கொண்டு கேட்டாள் 'நான் உன்னட்ட ஒன்று கேட்க வேணும் என்டு கனநாள நினைச்சுக் கொண்டு இருக்கிறன். என்று சொல்லி விட்டு மெல்லிய சிரிப்போடு கீழ் நோக்கி பார்த்தாள். ஆனாலும் உடல் முழுவதும் ஏதோ ஒன்று உள் நுழைந்து என்னைக் கொல்வது போல் அச்சம் பரவியது. சற்று நேரம் கூட கழிந்து போயிருக்காது மெல்ல தலையை மேல் பக்கமாக நிமிர்த்தி ஒரு வாஞ்சையுடன் என்னை பார்த்தாள். இதற்கு மேலும் என்னால் பொறுமை காக்க முடியாமல் 'பரவாயில்லை டெய்சி எதுவானாலும் சரி கேளுங்க'.

 

அவள் மீண்டும் கீழ் நோக்கி பார்த்துக்கொண்டே 'உன்னுடைய விருப்பங்களோடு நான் உன்னோடு வாழனும் என்று ஆசைப்படுகிறேன். நீ என்ன... வார்த்தைகள் முடிவதற்கு முன்பே அவளுடைய முகத்தில் அறைந்தது போல் என்னுடைய முரட்டுக் குணத்தை வரவழைத்துக்கொண்டு எதுவும் பேசவில்லை. சயிக்கிளை வேகமாக செலுத்திக் கொண்டு அவளை அவளுடைய வீட்டின் முன்பு இறக்கி விட்டு விறுவிறுப்பாக சயிக்கிளைத் திருப்பிக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டேன். இரவு முழுவதும் ஏனோ அவளைப் பற்றிய எண்ணம் ஆகவே இருந்தது.

 

ஒரு வாரமாக அவளுடைய வீட்டின் பக்கம் போகவே இல்லை. ஆனால் அவளுடைய நினைவுகளோடு கழிந்தது. ஒரு முடிவுக்கு வராமல் குழப்பமான சூழ்நிலையில் இருந்தேன். அந்த நேரத்தில் தான் நேசன் என்னுடைய வீட்டிற்கு வந்து என்னை அம்மா கூட்டி வரச்சொன்னார் என்று என்னை அவர்களுடைய வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போனான்.

 

நான் வீட்டிற்குள் நுழைந்ததும் அம்மாதான் என்னை வரவேற்று பொதுவாக பேசினார். டெய்சியும், நேசனும் நாட்காலியில் இருந்து கொண்டு ரீ.வி பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு அரைமணி நேரம் கழித்து நான் என்னுடைய வீட்டிற்கு வந்து விட்டேன்.

 

இரவு முழுவதும் ஏனோ நித்திரை வரவில்லை. அன்றிரவு முழுவதும் அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன் உள்ளுக்குள் அவள் நினைப்பு இருந்தாலும் என்னைவிட வயதில் மூத்தவள், பொருளாதார ஏற்றத்தாழ்வு, சாதி, சம்பிரதாயம், என்னுடைய குடும்பம் நிலைகள் எல்லாவற்றையும் நினைத்துத்தான் அவள் மீதான என்னுடைய விருப்பத்தை தடுத்திருக்கலாம் என்று இப்போதுதான் எனக்கு விளங்கியது. காலையில் எழுந்ததும் முதல் வேலையாக அவளுடைய வீட்டுக்குச் சென்று என்னுடைய விருப்பத்தை தெரிவிக்க வேண்டும் என்று ஒரு உறுதியான முடிவெடுத்துக் கொண்டு தூங்கிவிட்டேன்.

 

என்னுடைய வழமைக்கு மாறாக இன்று அதிக நேரம் தூங்கிவிட்டேன் காலையில் 10 மணிக்கு தான் எழுந்தேன். எழுந்ததும் காலைக் கடனை முடித்துவிட்டு உடைமாற்றிக்கொண்டு அவளுடைய வீட்டுக்குப் போவதற்காக வீட்டு வாசலுக்கு வந்தேன். அக்கா வீட்டு வாசலில் நின்றாள். என்னைக் கண்டதும் 'கோயில் அடியில டெய்சியைக் காலையில கண்ட நான் அவள் ஏனோ தெரியலை ஒரு கவலையில் இருந்த மாதிரி தெரிஞ்சுது ஏதாவது பிரச்சினையாடா? என்று கேட்டாள்.

 

நான் அதுக்கு 'ஒரு பிரச்சினையும் இல்லை எதுக்கும் நான் போய் பாத்துட்டு வாரேன்' என்று சொல்லவும், வீதி வழியாக நடந்து வந்த இந்திய ராணுவம் கையைக் காட்டி என்னை கூப்பிட்டார்கள். மெல்ல மெல்ல அவர்கள் நடந்து வந்து கொண்டு இருந்த இடம் நோக்கிச் சென்றேன். அவர்கள் தங்களோடு வரும்படி கையால் சைகை மொழியில் சொன்னார்கள். நான் அவர்களுடன் தொடர்ந்து நடந்தேன். வீதியில் நடந்து வந்து கொண்டு இருந்த இன்னும் நாலு இளைஞர்களையும் என்னோடு சேர்த்துக் கொண்டார்கள்.

 

எங்களுக்கு முன்னுக்கும் பின்னுக்குமாக இந்திய ராணுவத்தினர் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அனேகமான வீட்டு வாசல்கள், ஜன்னல் கதவுகள் பூட்டப்பட்டு இருந்தன. ஒரு சிலர் ஜன்னல் வழியே நாங்கள் நடந்து வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை நான் அவதானித்தேன்.

 

நாங்கள் எல்லோரும் கடைசியாக பொம்மை வெளியில் ஒரு வீட்டில் இருக்கிற இந்திய இராணுவ முகாமுக்கு அழைத்து வரப்பட்டோம்.

 

வீட்டின் அருகோடு கிடுகளால் போடப்பட்ட பந்தலுக்கு பக்கத்தில் கிடந்த மண்ணுக்குள் உட்காரச் சொல்லி இந்திய இராணுவத் தளபதி ஒருவர் எங்களைப் பார்த்து கட்டளை இட்டார். நாங்கள் ஐந்து பேரும் மண்ணுக்குள் சக்கபணிய உட்கார்ந்து விட்டோம். கொஞ்ச நேரத்தில் கிட்டத்தட் நான்கு இராணுவ அதிகாரிகள் வீட்டின் உள் அறையில் இருந்து நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். மலையாள மொழியிலும் ஆங்கிலத்திலும் எங்களைப் பார்த்து விசாரனை நடந்தது. எனக்கு அவர்கள் பேசிய ஆங்கிலமும் மலையாளமும் ஒரளவு புரிந்து நான் பதில் சொன்னேன். பின்னர் மற்றவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நானே மொழிபெயர்த்து சொன்னேன். சுற்றி வளைத்து கேட்கப்படும் கேள்விகள் இதுதான் எல்.ரீ.ரீயை உங்களுக்கு தெரியுமா? அவர்களோடு உங்களுக்கு தொடர்பு இருக்கிறதா? ஈ.என்.டி.எல்.எவ் காராச்சிக்குள் திருத்துவதற்காக விட்ட மினி வானை வெளியே தள்ளி, றோட்டில் வைத்து எரித்து விட்டு ஓடிப் போனவர்களை நீங்க கண்டனீங்களா? இவ்வளவு தான் அவர்களின் கேள்விகளின் சுருக்கம். ஆனால் இந்தக் கேள்விக்கு முன்னும் பின்னும் அவர்களின் சப்பாத்து போட்ட கால்கள் எங்களைப் பதம் பார்த்துக் கொண்டு இருந்தது. ஆரம்ப விசாரணைகளின் போது எங்கள் மீது விழுந்த அடிகள் மெல்ல குறைந்து போய் விட்டன. எங்களோடு பிடிபட்டு வந்த துரை மீது விழுந்த அடிகள் குறையவில்லை. அதற்கு காரணம் என்று நான் நினைத்துக் கொண்டு இருப்பது துரை அடிக்கடி சிரித்து கொண்டே இருப்பது. இன்னொன்று அவனுடைய கண். அவனுடைய கண் பார்வை ஒருவகை சறுக்கலாக இருக்கும். நாங்கள் சிறு வயதிலேயே அவனை வாக்குக் கண்ணன், சறுக்குக் கண்ணன் என்றுதான் அழைப்பது வழக்கம். ஒவ்வொரு அடி விழும் போதும் அவனுடைய சிரிப்பும், பார்வையும் அவர்களை கின்டல் செய்வது போல் என்னவோ உணர்கிறார்களோ தெரியவில்லை.

 

ஒரு அரை மணிநேரம் தான் ஆகியிருக்கும் ஓட்டுமடத்திலிருக்கும் இன்ஸ்பெக்டர் குருசாமியின் வீட்டிற்கு வந்து விட்டோம். இன்ஸ்பெக்டர் குருசாமி எண்பதுகளில் அவரது வீட்டிற்கு முன்னால் வைத்து இயக்கத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய வீட்டில் முகாம் அமைத்து வைத்து இருக்கும் ஈ.என்.டி.எல்.எவ். இன் ஒரு சிறிய இருக்கைகள் அற்ற மினி வானில் எங்களை ஏறும்படி இந்திய ராணுவத்தினர் சொல்ல நாங்கள் உள்ளே ஏறி உட்கார்ந்து இருந்தோம்.

 

ஐந்து நிமிடங்கள் கூட ஆகிஇருக்காது முகாமிற்கு வந்து விட்டோம். வானில் இருந்து நாங்கள் ஐந்து பேரும் இறங்கினோம். வீட்டில் உள்ளவர்கள் சிலர் ஆயுதங்களை வைத்திருந்தார்கள். எங்களை பார்த்து ஒரு இளைஞன் வாசற்படியில் உட்காரச் சொன்னான். நாங்கள் உட்கார்ந்து கொண்டோம். அவர்களின் முகங்கள் எல்லாம் எங்களுக்கு தெரிந்த முகமாகவே இருந்தது. என்னோடு பிடி பட்டு வந்த பொடியன் ஒருத்தன் அவங்களோட கதைத்துக் கொண்டு உள்ளே சென்றான். அவனுக்கு ஏற்கனவே அவர்களை தெரியும் போல. எங்களை ஏனோ ஒரு விசாரணையும் செய்யவில்லை. அதே நேரத்தில் எங்களை அன்னியர் போல் நடத்தவும் இல்லை. எனக்கு வியப்பாக இருந்தது. அவர்கள் எங்களை விடுதலை செய்வதற்காக யாருடைய அனுமதி பெறுவதற்காக காத்திருப்பது போல் எனக்கு அந்தப் பொடியன் உள்ளே போனதில் இருந்து மனதில் தோன்றியது.

 

மினி வானில் இயக்கப் பொடியன்கள் வந்து இறங்கினார்கள். இறங்கியவர்களில் இருவர் யாழ்ப்பாணத்தில் நன்கு அறிமுகமான முகங்கள். ஒன்று பாபுஜி என்று அழைக்கப்படுபவர். மற்றவர் ஞானசேகரன். அவர்களை கண்டதும் எங்களுக்குப் பக்கத்தில் நின்ற பொடியன் ஒருத்தன் ஓடிப்போய் அவர்களுக்கு ஏதோ சொன்னார். அதன்பின் எங்களை வீட்டுக்குப் போகும்படி அந்த பையன் வந்து சொன்னான். உள்ளே போன பொடியினைத் தவிர நாங்கள் எல்லாரும் அந்த முகாமை விட்டு வெளியே வந்துவிட்டோம்.

 

டெய்சியின் வீட்டிற்கு வந்தேன். நேசன்... நேசன்... என்று கூப்பிட்டுக் கொண்டு முன் இரும்புக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தேன். விறாந்தையில் யாருமில்லை. ஒரு வேளை எல்லாரும் தூங்கியிருக்கலாம் என்டு நினைத்துக் கொண்டு மீண்டும் நேசன் நேசன் என்டு கொஞ்சம் சத்தமாக கூப்பிட்டேன். அறைக்குள் இருந்த கட்டிலில் படுத்துக் கிடந்து கொண்டு டெய்சி அழுகுரலில் 'உள்ளே வாடா மரியான்' என்றாள்.

 

நான் தயங்கித் தயங்கி அறையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தேன். மீண்டும் அவளே அடைத்துப் போன குரலில் சொன்னாள். 'வீட்டில யாரும் இல்லையட எனக்கு எழும்ப ஏலாம இருக்கு. அறையைத் திறந்து உள்ளே வாட' என்றாள்.

 

நான் கதவை மெல்லத் திறந்தேன். அவளுடைய முகத்தை பார்த்து விட்டு ஒரு கணம் விக்கித்துப் போனேன். முகம் முழுவதும் அழுது கன்றிச் சிவந்து போய்க் கிடந்தது. என்னைப் பார்த்ததும் ஈரம் கசிந்து பரவிக் கிடந்த கன்னத்தை அவள் கையால் துடைத்துக்கொண்டு மெல்ல உடலை அசைத்து கட்டிலில் இருந்து எழுந்து கொண்டாள். யாரோ இதற்கு முதல் அவளுடைய கட்டிலை ஒட்டியபடி ஒரு நாற்காலியை போட்டு உட்கார்ந்து இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன் அந்த நாற்காலியை காட்டி உட்காரச் சொன்னாள். நான் கொஞ்சம் பின் நோக்கி நாற்காலியை நகர்திக் கொண்டு உட்கார்ந்து கொண்டேன்.

 

'வீட்டில யாரும் இல்லையா?

 

'இல்லையட. உன்னை பிடிச்சுக் கொண்டு போய்யிற்றாங்க என்டு கேள்விப்பட்டதும் வீட்டவிட்டுப் போனவங்கதான் என்னும் வரல... வீட்டில சமையலும் இல்லை. வீடே செத்த வீடு மாதிரிக் கிடக்குது. நீ இப்ப வந்திருக்கா விட்டால் என் உயிரே போயிருக்கும் போல் இருந்தது' என்றாள்.

 

'என்னை விட்டவுடனேயே உன்னைத் தேடித்தான் வரவேனுமென்டு மனம் விரும்பிற்று. ஆனா வீட்ட என்னத் தேடுவாங்க என்டதக்காகத்தான் வீட்ட போய்ற்று இங்க வந்தனான். எங்கட அக்கா சொன்னா உங்கட அம்மா, அப்பா, தம்பி எல்லாரும் வீட்ட வந்துட்டு போனவங்கலாம். போகும் போது சொன்னாங்கலாம் 'அசோக்கா கொட்டலுக்கு போய் என்னைப் பற்றி விசாரிக்கப் போறோம்' என்டு சொல்லிப்போட்டு போனவங்கலாம். என்னைப் பிடித்து வைத்திருந்த பொம்மைவெளி இந்திய இராணுவ முகாமில் இருந்து ஒட்டுமடத்தில இருக்கிற இன்ஸ்பெக்டர் குருசாமி வீட்டில இருக்குற முகாமுக்கு கொண்டு வந்துட்டாங்க. மினிவானிலே எங்களை ஏத்திக் கொண்டு இடப் பக்கம் திரும்பும் போது கண்ணாடி வழியே பார்த்ததும் உங்கட அம்மாவைக் கண்டனான். உங்கட அம்மா சிறிய மரத்துக்கு கீழ வெய்யில் அகோரம் தாங்கமுடியாமல் தலைக்கு மேல சீலையை போட்டபடி நின்று கொண்டிருந்தா. நான் அப்பவே என்னைத் தேடித்தான் உங்கட அம்மா வந்திருக்கிற என்று நினைத்திட்டன்'.

 

'உன்ன இந்திய இராணுவம் பிடிச்சுக் கொண்டு போய்ற்றாங்க என்டு எங்கட தம்பி சொன்ன போதே என் உயிர் போய்ற்றுதடா... என்னுடைய வாழ்க்கையில அந்தக் கணம்தான் விடுதலைப் புலி இயக்கத்தில சேரவேண்டும் என்ற நினைப்பு வந்தது...' நீ எங்கட வீட்டிற்கு வராது இருந்த நாட்களில நான் சோர்ந்து போய் இருந்தன். ஒரு நாள் அம்மாவே எனகிட்டே மரியான் ஏன் வீட்டிற்கு வராமல் இருக்கிறான் என்று கேட்டா. நான் உன்னிடம் விருப்பம் கேட்ட போது நீ நடந்து கொண்ட முறையும் அதன் பின் தான் நீ வராமல் விட்டாய் என்று ஒன்றும் மறைக்காமல் சொன்னேன். அம்மா எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு இருந்து விட்டு அம்மா சொன்ன, 'அவன் பாவம். எந்தக் காரணத்தைக் கொண்டும் அவனுடைய மனம் நோகும்படி நடந்து கொள்ளவேண்டாம்' என்று சொன்னா. வீட்டில் இந்த விடயம் குறித்து யாருக்கும் சொல்லாமல் தம்பியை அனுப்பி உன்னை வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னதே அம்மாதான். அம்மாவுக்கு உன்னைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இருக்குது. அவ உங்க மீது நம்பிக்கையும், அளவு கடந்த அன்பு வைத்திருக்கிற. உன்னை தன்னுடைய பிள்ளைகளின் ஒருத்தனாகவே இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கிற' என்றாள்.

 

நான் அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு இருந்து விட்டு சொன்னேன்... 'பிற உயிர்களிடம் இருக்க வேண்டிய அன்பை, மனித நேயத்தை உன்னிடமிருந்துதான் நான் கற்றுக் கொண்டனான்... என்ர வாழ்க்கையே வெறுமையானது. எந்த விடயத்திலும் பிடிப்பில்லை. கண்ணீராலும், கவலையாலும் நிறைந்தது. சுயநலம் நிறைந்த இந்த உலகத்தில உங்களைப் போல பாசங்கில்லாத பார்வையும், அன்பும், அரவணனப்பும் நிறைந்த மனிதர்களைக் காண்பதே அரிது. ரொம்ப நாளுக்கப்புறம் இப்பத்தான் சந்தோஷமாக இருப்பதாக நான் உணர்கிறேன். அதுவும் உங்களால்தான் என்று நினைக்கும் போது இன்னும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போய்விட்டேன். நான் உங்களை என்னுடைய மூன்றாவது அக்காவாகத் நினைத்தேன். அதனால்தான் அன்றைக்கு என்கிட்ட விருப்பம் கேட்ட போது எனக்குக் கோபம் வந்தது. வந்த கோபத்தில் தான் என் முகத்தை கோணிப் பிடித்தபடி வீட்டுக்கு போயிற்றேன். அது என்னுடைய சுபாவம். அதை மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன். அதுக்காக இப்ப வருந்துகிறேன் மன்னிப்பு கேட்கிறேன்' என்றேன்.

 

'தப்பான ஆள் கூட வாழ்கிறதை விட எதுவுமில்லாத ஒரு நல்ல மனிதன் கூட வாழ்வதைத்தான் மனம் நாடுது. நீ நல்லவன். எனக்கு எல்லா வகையிலும் பொருத்தமானவன். சில வேளை பேச்சற்றுப் போகும் இரவும் பகலும் அப்போழுதெல்லாம் ஏன் என்னை பிடிக்காமல் போனது என்று யோசிப்பேன். நொடிப் பொழுதும் உன்னையே நினைத்துக் கொண்டு உனக்கு எதுவும் நடந்த விடக்கூடாது என்று நினைத்துக் கொள்வேன்...' திடீரென ஏதோ ஒன்று தோன்ற 'ஏன்டா மரியான் நம்ம தமிழ் பொடியங்களையெல்லாம் வெட்டி வெட்டி சாக்கில்ல போட்டு சந்திகளிலும், கடைகளின் முன்னாலும் போடுகிறாங்கலே... நினைச்சாலே என்ர நெஞ்சு பதைபதைக்குது' என்றாள்.

 

எனக்கு அழுகை அழகையாக வந்தது. மனதை ஒரு நிலைப் படுத்திக் கொண்டு... 'நான் உன்னை விட்டு எங்கையும் போகமாட்டேன்'. என்றேன்.

 

'ஓ அதுக்கென்ன... உன்னுடைய விருப்பம் எதுவோ அதன்படியே நடந்து கொள்' என்றாள்.

 

எழும்ப முடியாமலும், இருக்க முடியாமலும் பலயீனமாக டெய்சி இருந்தாலும் பறப்பதற்கான முனைப்பு கண்களில் தெரிந்தது. என் வயிற்றில் தன் முகத்தை புதைத்து கொண்டு என் மீதான தன் விருப்பை தாரளாமாக தந்தாள். என் உயிர் அவள் உயிரில் உரசி தீயாய் என் உடலெங்கும் பரவியது. நான் என் மீதான தடையை தகர்த்த போது அவளுக்குள் ஊறிக் கிடந்த உணர்ச்சிமிக்க வலிகள் நீங்கும் வரை நீடித்தது. இருவரிலும் ஆசை மனம் கொண்டதால் ஒரு வார்த்தைகூட உதிர்தல் சாத்தியம் இன்றி எங்கள் உலகம் இயங்கியது.

 

(முற்றும்)

  டானியல் அன்ரனி ( 1947.07.13 - 1994) யாழ்ப்பாணம் , நாவாந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர் , விமர்சகர் , பத்திரிகையாளர். இவர் ஆரம்பத்தில் சிறுகதை...