Friday, May 27, 2011

பெண் துறவி

(சிறுகதை)
டானியல்ஜீவா

ஜீவன் மெலிந்து போயிருந்தான். அவன் பெரிய மொத்தமானவன் என்று சொல்லமுடியாது. அதே வேளை ஒல்லியானவன் என்றும் சொல்ல முடியாத இடைப்பட்ட  நிலையிலிருந்தவன்;. கடந்த  ஒரு வாரமாகத்தான் அவனுடைய உடல் என்றுமில்லாதவாறு மிகவும் மெலிந்திருந்தது. கண்களில் துயர் இழைந்து கன்னம் உள்ளொடுங்கி தோல் வறண்டு கிடந்தது.

ஒரு வேளைச் சாப்பாடு மட்டும் சாப்பிடுவதால் அவனுடைய உடலில் மாற்றம் ஏற்ப்பட்டிருக்கலாம். பசி, பட்டினிச் சாவு, மலிந்து, இருள் கவிந்து கிடக்கும் பூமியிது. அதனால் மற்றவர்கள் போல் இவனையும் சொல்லொனாத் துயர் வந்து கொல்கிறதோ..?

ஜீவனின் ஊர் யாழ்ப்பாண கரையோரப் பிரதேசத்தை அண்டியிருக்கிறது. இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்து அமைதியாய் இருந்த காலத்தில் இவ்வூரில் நடந்த சாதிக் கலவரத்தின் போதே இராணுவம் ஆயுத த்தை மேல் நோக்கிச் சுட்டு தன்னுடைய நடவடிக்கையை முதல் தொடங்கியதாக வரலாற்றில் பதிவாகி யிருக்கிறது. ஆனால் யாரும் கொல்லப் படவில்லை.

ஜீவனுக்கு இருபைத்தைந்து வயதிருக்கும். ஆனால் வயதை மீறிய உடல் வளர்ச்சி. ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்தான். சிறுவயதிலேயே யாழ்ப்பாண நகருக்குள் இருக்கும் வெல்டிங் செய்கிற ஒரு தொழிற் சாலையில் வேலைக்குச் சேர்ந்தான். அவனுடைய சொந்த முயற்சியால் வேலையை நன்றாக செய்யப் பழகினான். முதாலாளியும் அவனுடைய திறமையையும் வேலையில் அவன் காட்டுகிற அக்கறையையும் பார்த்து அவனுக்கு நல்ல சம்பளம் கொடுத்தார்.

கடந்த வாரமாக அவன் யாழ்ப்பாண நகரப் பக்கமாக போக மனமற்றிருந்தான். நான்கு நாட்களுக்கு முன்னர் தான் வேலனையில் குடும்பத்தோடு அகதியாய் இருந்து விட்டு கடல் வழியாக வீடு திரும்பி யிருந்தான். இன்னும் யாழ்ப்பாண நகரம் வழமைக்கு திரும்பவில்லை. கடைகள் பல இன்னும் பூட்டியபடியே கிடந்தன.

வீதியெங்கும் நெடுந் துயரம் வழிந்து ஒடிய தடம் இன்னும் ஈரமாய் தென்படுகின்றது. காற்றெங்கும் உயிர் மரணித்து காந்தீயத்தின் அகிம்சை அம்மணமாய் படர்ந்து கிடந்தது. இவ்வளவும் நடந்தும் அவன் தன் போக்கில் வாழப் பழகி விட்டான். அவனுடைய தகப்பன் இந்திய இராணுவத்தால் ஒட்டுமடச் சந்தியில் வைத்து சுடப்பட்ட பின்னர் அவனுடைய மனநிலை உறைந்து போயிருக்கலாம். அப்படியும் நினைக்க முடியாது. ஏனென்றால் 83ன் இறுதிப் பகுதியில் இளைஞர்கள், மாணவர்கள் என்று படையெடுத்து இயக் கங்களுக்கு சென்ற போதும் அவன் எந்த மாறுதலுக்கும் உட்படாமல் தான் வாழ்ந்து வந்தான்.

அவன் ஒரு பெண்ணை மனதளவில் விரும்பித் திரிந்தான். அவள் பெயர் ராணி. ஜெயராணி என்னும் இயற் பெயரைக் கொண்டவளை எல்லோரும் ராணி என்றே அழைப்பார்கள். ராணி உயர் தரம் கலைப் பிரிவில் படித்துக் கொண்டிருக்கும் போதே இயக்கத்திற்கு போய் விட்டாள். இந்திய அமைதிப் படைக்கும், விடுத லைப் புலிகளுக்கும் இடையில் நடந்த யுத்தம் ஒரளவுக்கு முடிவுக்கு வந்த பின் அவள் என்ன காரணமோ தெரியவில்லை இயக்கத்தை விட்டு வெளியேறி வீட்டிற்கு வந்து விட்டாள்.

அவள் வீடு திரும்பிய பின் மீண்டும் படிப்பை தொடங்கினாள். வைமன் றோட்டில் இருக்கும் ஐயரிடம் ஆங்கிலமும் ,விக்கினா ரீயூசன் சென்ரரில் கலைப் பிரிவுக்குரிய பாடங்களையும் படித்து வந்தாள். அண் மையில் விக்கினாவில் பொருளாதார பாடம் படிப்பித்துக் கொண்டிருந்த ஆசிரியரும் யாழ்ப்பாண பல்க லைக் கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றிக் கொண்டிந்தவரும் இனந் தெரியாதவர்களால் கொல்லப் பட்ட கதை ஊரில் இன்னும் ஒய்ந்து போகவில்லை. ராணி ஒவ்வொரு நாளும் ரீயுசனுக்குப்  போகும் போது ஏக்கமும் வலியும் அவனுக்குள் கிடந்து வதைக்கும். ஆனால் ராணி இந்த போர்ச் சுழலை பெரி தாக எடுத்துக் கொள்ளாதவள் போலவே இருந்து வந்தாள். தன் உயிரை பெரிதாக நினைக்காததோ அல்லது இத்தனை உயிர்களும் தேவையற்று அழிந்து போவதைப் பார்த்து மனம் மரணித்து போய் விட்டதோ தெரியவில்லை..? ஆனாலும் அவளுடைய வாழ்க்கையை நினைத்தவுடனேயே இவனுக்கு நெஞ்சு படபடக்கும். எல்லாம் தெரிந்த போதும்  அவள் மீது தீராத காதலும் தவிப்பும் இழைந்திருந்தது. அவனு டைய உணர்வெல்லாம் அவளைச் சுற்றியே ஒடிக்கொண்டிருந்தது. என்ன பிரச்சனை நேர்ந்தாலும் அவள் மீது கொண்ட பற்றை பாசத்தை எப்படியாவது தெரிவிக்க வேண்டுமென்பதில் குறியாக இருந்தான்.

ராணி அவனுடைய சொந்த ஊரைச் சேர்ந்தவள். சிறுவயது முதல் அவனுக்கு அவளைத் தெரியும், அவள் மீது  இனம் புரியாத ஈர்ப்பு கடந்த மாதங்களில் இருந்துதான் அவனுக்குள் வளரத் தொடங்கியது. பல சமயம் அவனை கலவரப் படுத்தியது. கடல் இழுத்துச் சென்ற உயிர்களைப் போல் அவனுடைய மனம் அதன் போக்கில் இழத்துச் சென்று அவனுடைய உயிரின் ஒரத்தில் அவளுடைய நினைப்பை குவித்து அது பனிப்படலமாய் மாறிப் போய்விட்டது.

காமக் கெடுவால் முளைத்த காதலாய் அவன் எப்போதும் தன்னை உணர்ந்து கொள்ளவில்லை. சில வேளை அவளை பார்க்கும் போது தேவமாதவைப் பார்ப்பது போல் அவன் உணர்ந்து கொள்வான். தேவமாதாவின் கால்களுக்குள் கீழ் பாம்புகள் ஏன் சபிக்கப்பட்டு கிடக்கின்றன என்று  அவன் முரண்பட்டு சிந்திப்பதும் உண்டு.

அவனுடைய உணர்வுதான் எவ்வளவு விசித்திரதமானது..?

அவளுடைய அனுமதியில்லாமலே அவள் மீது காதல் கொண்டதற்கான காரணமாக அவனுடைய ஆய்வின் முடிவில் அவன் கண்டு பிடித்தது ‘சாந்தமான முகபாவனை’  தான்.என்று அவனுக்கு பல தடவை தோன் றியது.

எல்லா நினைப்புகளுக்கும் மேலாக அவனுக்குள் இயல்பாயிருக்கும் அச்ச சுபாவம் அவளிடம் நெருங்கி தன் விருப்பத்தை கூற மறுத்தது. அவன் தன்னுடைய விருப்பத்தை அவள் மீது திணிக்கவும் விரும்ப வில்லை. ஆனால் அவன் தன்னுடைய விருப்பத்தை சொல்ல எடுக்கும் அவகாசம் கூடக் கூடக் அவனு க்குள் உள்ளுறைந்த அவளைப் பற்றிய ஆர்வம் மேலோங்கி அவனுடைய  உடல் முழுவதும் பரவி வலித்தது.

ராணி கோயிலுக்கு போவதாலேயே ஜீவனும் ஒவ்வொரு நாளும் தவறாமல் கோயிலுக்கு போகிறவனாக தன்னை மாற்றிக் கொண்டான். அவள் எப்போது சர்ப்பிரசாதம் எடுக்க அடுத்தவர் முன்னால் வருவாள் என்று காத்திருந்து அவள் வரும் போது இவனும் எதிர்த்திசைக்கு வந்து சறாப்பிரசாதம் எடுப்பான். அவன் கோயிலுக்கு போவது கடவுள் மீது கொண்ட பற்றினால் அல்ல அவள் மீது கொண்ட தீராத அன்பினால் தான்.

ஊரில் சில வசதிபடைத்த வீடுகளில் இரவில் தொலைக்காட்சி பார்ப்பதற்கு என்றே சிலர் கூடுவார்கள். ராணி எந்த வீட்டிற்கு போனாலும் அந்த வீட்டிற்கு இவனும் போய்விடுவதை வழக்கமாக்கிக் கொண்டான். ஜீவன் இயல்பில் மௌனப் பேர்வழி. எந்தக் கூட்டத்தில் நின்றாலும் அமைதியாக நிற்பதே அது ஒரு தனியழகு. தொலைக்காட்சி நிகழ்சியை பார்ப்பவன் போல் பாவனை காட்டிக் கொண்டு அவனுடையு பார்வை முழுவதும் அவள் மேல் படரும்.

ராணிக்கு சிறு வயதிலிருந்தே துறவறத்திலேயே மனம் ஈடுபாடாய் இருந்தது. கடவுளை தன் தாயை விட அதிகம் நேசிப்பவள். ஆண்டவனிடம் அயராது தன் விருப்பத்தை செபத்தின் வழியாக கேட்டுக் கொண் டேயிருந்தாள். கன்னியாஸ்திரியாக வந்து தான் வாழும் சமூகத்திற்கு தன்னால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் என்பதெ அவளுடைய சிறுவயது முதல் முளைத்த முதல் கனவாய் இருந்து வந்தது. இடை யில்தான் திடீரென இயக்கத்திற்கு போனாள். ஆனால் அவளால் தொடர்ந்து அங்கு இருக்க முடியவில்லை. தான் துறவியாகப் போகவேண்டும் என்ற விடயத்தை தன் தாயிடம் ஒரு நாள் சொன்ன போது அவள் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் சம்மதித்தாள்.

ராணியிடமிருந்து மெல்லிய புண்சிரிப்பு அவ்வப்போது முகம் காட்டும். மற்றவர்களுக்கு அது ஒரு வசீகரத் தன்மையை ஏற்ப்படுத்துவதாக அவள் எப்போதாவது உணர்ந்ததில்லை. அதுவே அவனுடைய தூக்கத்தை இயல்பான வாழ்வினை எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் குலைச்சு மனச் சிதைவுற்றவன் போல் மாறிப் போனான்.

காலைக் கண்விழிப்பில் யாரோ ஒருவர் துப்பாக்கியோடு வீட்டு வாசலிலோ அல்லது வீதியிலோ நிற்பார் கள். அது எழுதப்படாத விதியாக மாறிப் போய் விட்டது. சுற்றி வளைப்பு தேடுதல,; காணமல் போதல் என்று நித்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது. நிம்மதியான வாழ்வென்பது நெடுநாளாக காணமால் போய் விட்டது.

நேற்று யாழ்ப்பாணத்துக்கு வேலைக்குப் போன ஜீவனை புண்கால்களோடு கடலில் இறங்கிய மீனவனை மொய்த்து நிற்கும் மீன் குஞ்சுகள் போல் சுற்றி நின்று இந்திய இராணுவத்தினர் அரைமணி நேரத்திற்கு மேல் விசாரணை செய்து விட்டு விடுவித்தார்கள். அதன் பின் அவனுடைய உடலில் ஒருவித பய உணர்வு அப்பிக் கொண்டது. ஜீவனின் அண்ணன் கனடாவில் இருக்கிறார். அங்கு அவனோடு இருந்தால் நிம்மதி யாக இருப்பான் என்று அவனுடைய தாயார் முடிவெடுத்து அவனிடம் கேட்ட போது, அவன் வெளிநாடு போவதை அடியோடு மறுத்து விட்டான். ஜீவன் வெளிநாடு போக மறுத்ததற்கு ராணியும் ஒரு காரணம். ராணியை அவன் விட்டு பிரிய மனமில்லாத போதும் ராணுவ விசாரணையின் பின் ஒரு வகையாக குழம் பிப் போனான். உயிருக்கு ஏதும் நடந்திடுமோ என்று மனதிற்குள் பயப்படத் தொடங்கினான். ஆனாலும் எந்த முடிவானலும் ராணியின் விருப்பத்தை அறிந்த பின்னரே முடிவெடுக்க வேண்டும் என்று தீர்மானித் தான். அவள் நாளைக் காலையில் ரீயுசனுக்கு போகும் வழியிலேயே வைத்து தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்க வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தான்.

யாழ்ப்பாண வீதி பிள்ளை பிடிப்பவர்களுக்கு பயந்து வெளுத்து காயப்போட்டுக் கிடந்தது. அவ்வப் போது இப்போதெல்லாம் இப்படி கிடப்பது வழக்கமாகி விட்டது. நேற்றிரவு மழை பெய்திருக்க வேண்டும் நிலம் ஈரமும் மணமும் போர்த்திக் கிடந்தது. வீதியின் ஒரங்களில் குடை விரித்து காளான்கள் உறங்கிக் கொண் டிருந்தது. மண்ணுண்ணிப் பாம்புகள் மணலில், தார்றோட்டில் கோடு வரைந்து அடுத்த உயிர்களுக்கு எந்த  வித தீங்கும் மனசால் கூட விளைவிக்காமல் தன் போக்கில் மொழி வரைந்த இசையோடு அவைகள் ஊர்ந்து கொண்டிருந்தன. நாவலர் வீதியில் ராணியின் சையிக்கிள் நகர்ந்து கொண்டிருநத்து. அவள் சைக்கிளை அதி வேகமாக ஓட்டுவதில்லைப் போலும். சில வேளை சைக்கிளை கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காகவோ தெரியவில்லை. சைக்கிள் அவ்வளவு மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது.

வெள்ளை நிறத்தில் ‘ஸ்கேர்ட்டு’ம் கறுப்பு கலரில் பாவடையும் அவளுக்கு மிக அலங்காரமற்றவள் போல் தோற்றம் கொண்டிருந்தது. நெஞ்சை மறைத்திருந்த உள்ளாடை கறுப்பு கலரில் இருந்தது. அவள் சைக்கிளை ஓட்டும் போது அவளுடைய பின் கால்களின் அசைவு அழகிய கவிதையொன்றை எழுதிக் கொண்டிருந்தது. அவளுடைய இரண்டு கால்களிலும் முழங்காலிருந்து கீழ் கால்வரை நிறைய புண் வந்த காயங்களின் வடுக்கள் நிறைந்திருந்தன. .சின்ன வயதில் ‘பொக்குளிப்பான்’ வந்திருக்கலாம். இரண்டு கால்களின் விளிம்பிலும் தோல் வெடிப்புகள் கிடந்தன. அது பித்த வெடிப்போ அல்லது தோல் காய்ந்து வெடித்திருக்கலாம். அந்த வெடிப்புகளின் மீது புழுதி படுத்திருந்தது. கீழ்க் காலிருந்து பாவடையின் விளிம்பு வரை ‘பாரை’ மீனின் தோல் மீது படர்ந்திருக்கும் செதில் போல் அவளுடைய கால்கள் இருந்தன. தங்கம் வெள்ளியென்று எதுவுமே அவள் அணிந்திருக்கவில்லை. காதில்கூட ஒன்றுமில்லை. ‘பெந்தகோஸ்’ சபையில் இருக்கிற பெண்களைப் போல் இருந்தாள். கறுப்புக் கலரை உடம்பெல்லாம் ஆசைப்பட்டு பூசியது போல் அவளுடைய நிறம். அவளால் கறுப்புத்தான் எவ்வளவு கச்சிதமாகவும் அழகாகவும் இருக்கிறது. முகத்தில் மட்டும் வசீகரம் வழிந்தோடியது.

அவளைப் பின் தொடர்ந்து ஜீவன் நாவலர் வீதியால் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தான். ராணியின் சைக்கிளுக்கு பெரிய இடைவெளி விட்டு அவனுடைய சைக்கிள் போகவில்லை. ஆக மிஞ்சிப் போனால் கூப்பிடும் தூரத்தில் தான் அவள் போய்க் கொண்டிருந்தாள். ஒட்டோ ஒன்று படுவேகமாக அவளைக் கடந்து போனது. ’டற்சன்’ காரொன்று அவள் போயக் கொண்டிருந்த பாதையின் எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்தது. காரின் பின் பக்கம் எந்த மறைப்பும் இன்றி கிடந்தது. சிலர் கூர்க்கா படை கட்டுகின்ற தலைப்பாவுடன் ஆயுதம் ஏந்தியபடி நின்றார்கள். சில இளைஞர்கள் சாதராண உடையுடன் ஆயுதம் தரித்தபடி நின்றார்கள். கார் சீரான வேகத்துடன் அவளைக் கடந்து சென்றது. யார் அந்த காரில் போகிறார்கள் என்பதை அவளால் அடையாளம் கண்டுகொள்ள முடியயாமல் இருந்தது. இந்திய இராணுவ த்தினர் ஒழுங்காகவும் சீராகவும் வீதியின் இருபக்கத்திலும் ஆயுதம் தாங்கியபடி நடந்து போய்க் கொண்டி ருந்தார்கள். பயந்து பயந்து எத்தனை நாளைக்குத் தான் வாழ்வது என்று அவளுக்கு தோன்றியது.

அஞ்சனந்தாள் சந்தியால் ராணி திரும்ப அவனும் தன்னுடைய சைக்கிளை திருப்பினான். சந்தியின் மூலையில் இரத்தம் வடிந்தபடி வெள்ளைத் துனியால் மூடப்பட்டு கிடந்த இறந்த உடலை யாழ்ப்பாண மருத்துவமனையிலிருந்து வந்த மினி வான் ஒன்று ஏற்றிக் கொண்டிருந்தது. உடலில்லிருந்து வழிந்தோடிய இரத்தம் நிலத்தில் காயந்து கிடந்தது. அவள் உடலைப் பார்த்தவுடன் விக்கித்து போனாள். முகம் கறுத்து வாடிப் போனது. ஒரு கணம் தான் அந்த மன மாற்றம் அவளுக்கு நிகழ்ந்திருக்க வேண்டும். ஏதோ யோசனை தோண்ற மறுகணமே அதை மறந்தவள் போல் அதைக் கடந்து சென்றாள். மனித மனம்தான் எவ்வளவு மாறிக் கொண்டிருக்கிறது… ஒரு உயிர் வீதியில் வெட்டப்பட்டோ, சுடப்பட்டோ கிடப்பதைக் கூட மிகச் சாதரணமாய் கடந்து போகிறது.

அவன் கிட்ட நெருங்க நெருங்க அவனுடைய உதடும் உள்ளமும் உறைந்தது. நெடுநாள் தூக்கத்தை கலைத்த கனவு ஒரு கணம் அவனுக்குள் ஓடி வந்தது. வெட்கம் விடுதலையடைந்து எங்கோ ஓடி மறைந்தது. எப்படியோ அவனுக்கு தைரியம் வந்து விட்டது. அவளிடம் கேட்டே ஆகவேணுமென்டு மனம் முடிவெடுத்தது. கிட்ட சைக்கிளில் நெருங்கிய ஜீவன் ‘ராணி’ என்று கூப்பிட்டான். கூப்பிட்ட சத்தம் வந்த திசையை பார்த்த ராணி தன்னை கூப்பிட்டது ஜீவன் தான் என்று கண்டு கொண்டாள். சடுதியாக சைக் கிளை நிறுத்தி சீற்றிலிருந்து இரண்டு கால்களையும் நிலத்தில் ஊன்றிக் கொண்டு திரும்பிப் பார்க்கவும் ஜீவன் அவள் பக்கம் வரவும் சரியாக இருந்தது. “என்ன ஜீவன் என்னைக் கூப்பிட்டனீங்களா…?” என்று கனிவான குரலில் கேட்டாள்.

“ஓம்…ராணி என்று சொல்லிக் கொண்டு அதற்கு மேல் வார்த்தை வராமல் சொல்லுறைந்து அங்கலாய்ப் புடன் நின்றான். எதுவுமே பேசாமல் நின்ற ராணியின் முகத்தில் சோகமும் வியப்பும் விரவி இழைந்தி ருந்தது. இயல்பாக அவளுடைய முகத்தின் தோற்றம் அப்படித்தான என்று அவனுக்கு தெரியவில்லை. அவளுடைய விழியிரண்டும் நேர்த்திசையில் நிமிர்ந்து அவனை கவனித்து விட்டு நிதானம் இழக்காமல் “என்ன ஜீவன் நீங்கதான் கூப்பிட்டுட்டு ஒன்டும் கதைக்காமல் நின்டால் சரியா…ஏதும் வீட்டில பிரச்சி னையா…?”                                                                             மௌனித்து நிலத்தை பார்த்துக் கொண்டிருந்த ஜீவன் தன்னை சுதாகரித்துக் கொண்டு; “அப்படி ஒன்டு மில்லை…எனக்குத்தான்…”வார்த்தை உடைந்து நின்றது.

“எனக்குத்தான் என்றால் என்ன அர்த்தம்…கொஞ்சம் விளங்குமாப்போல சொல்லுங்க ஜீவன்.”

விளங்கிக் கேட்கிறாளா அல்லது விளங்காமல் தான் கேட்கிறாளா?  பிடி கொடுக்காமல் கேட்கிறாளே.

“இல்ல கொஞ்ச நாளாக உங்க மீது எனக்கு விருப்பம் வந்திருக்கு. அந்த விருப்பத்தை கன நாளாய் உங்க கிட்ட சொல்லுறதுக்கு நினைத்தனான். ஆனா உங்களைக் காணும் போது உங்க முகத்தை பார்த்து கேடக்கக் கூடிய தைரியம் என்னிடம் இல்லாமப்போய்ச்சு. இப்பகூட எனக்கு இந்தத் தைரியம் எப்படி வந்ததென்றே எனக்கு தெரியல..”

அவள் அவனிடம் சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்தக் கேள்வியை. நிமிர்ந்து பார்த்தவள் நிதானம் இழக்காமல்; “ஜீவன் உங்கட உணர்வு புரிகிறது. ஆனா காதல், கல்யாணம் என்கிற விடயத்தில் எனக்கு விருப்பமில்லை. நான் தொடர்ந்து ரீயுசனுக்கு போறதை நிறுத்தி விட்டு ‘பெண் துறவியாக’ போகப் போகி றேன். நான் அடுத்த கிழமையே சிஸ்டர் மடத்துக்கு போறதுக்கு ஏக்கனவே அவர்களோடு கதைத்து விட்டேன். அதுதான் என்னுடைய  நீண்ட கால கனவாயிருந்தது. இப்ப நிலமை மோசமாக இருக்கிறது. யாருக்கு என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. சிஸ்டர் மடத்திலேயே இருந்து கொண்டு என்னுடைய படிப்பையும் தொடரப் போகிறேன்”என்று சொல்லி முடிப்பதற்குள் அவன் வந்து கொண்டிருந்த திசையிலிருந்து எதிர்திசையில் சைக்கிளை ஓட்டினான். அவள் அதை எதிர் பார்த்தவள் போல் ஒன்றும் பேசாமல் தன்னுடைய சைக்கிளை ஓட்டத் தொடங்கினாள்.

அவனுக்கு கோபம் வந்த மாதிரி தெரியவில்லை. ஆனால் ஏன் வெடுக்கென்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு போனான் என்றுதான் அவள் யோசிக்கத் தொடங்கினாள். அவனுக்குள் உட்புகுந்து அவனை ஆட்டிப் படைத்து அவனை சித்திரவதை செய்து கொண்டிருந்த கனவொன்று தானாக வெளியேறியது போல் அவன் உணர்ந்து கொண்டான். அவன் அப்படி உணர்ந்து தன்னைத் திருப்திப் படுத்துவதற்காகவா அல்லது எந்தப் பிரச்சினையையும் அப்படித்தான் எடுத்துக் கொள்வான என்று புரியவில்லை.

அடுத்த நாள் காலையில் ஜீவன் வேலைக்கு போவதற்காக வீட்டு வாசலை விட்டு சைக்கிளை கீழே இறக்கிக் கொண்டிருக்கும் போது ஜீவனின் நண்பன் மூச்சு வாங்க ஓடி வந்தான்.

“என்னடா மச்சான்  இவ்வளவு வேகமாக ஓடி வாறாய்…அப்படி என்னட நடந்திட்டுது…?”

“நடக்கக் கூடாததுதான் நடந்துட்டு..”

“அப்படியென்னடா..?”

“ராணியை எல்லவோ யாரோ விடியப்புறம் பிடிச்சுக் கொண்டு போய்விட்டாங்க…ஊரே செத்த வீடு கொண்டாடுது…?”அவன் சொன்னான்.

ஜீவன் விக்கித்துப் போய் உறைந்து நின்றான்.கண்களில் நீர் முட்டியது.

                         ( முற்றும்)

  டானியல் அன்ரனி ( 1947.07.13 - 1994) யாழ்ப்பாணம் , நாவாந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர் , விமர்சகர் , பத்திரிகையாளர். இவர் ஆரம்பத்தில் சிறுகதை...