Wednesday, September 19, 2012

துயர் இறங்கி வரும் அகதியாய் செ.டானியல்ஜீவாசுற்றும் முற்றும் இழந்து
அண்ணன் குடும்பத்தோடு
வீதியில் நடந்து கொண்டிருந்தேன்.

மேலே வானில் கெலியும் பொம்பரும்
கீழே எங்கணும் கண்ணி வெடி
விதைக்கப்பட்டிருக்கலாம் என்ற
மனப்பயத்துடன் மெல்ல மெல்ல..
தோளில் சுமையுடன்

எதற்காக என் வீட்டையிழந்து
தெருத்தெருவாய் அலைய வேண்டும்..?
எப்போதும் எனக்குள்ளிருக்கும்
இக்கேள்விக்கு
இது வரை
விடைகிடைக்கவேயில்லை

காலம் காலமாய்
அழுது அழுது
கண்களில் ஒளியிழந்த அம்மா
நேற்றுவரை வீடு
திரும்பாத மகனுக்காக
காத்திருந்து களைத்துப் போய்
அழுத விழியோடு
எங்களுக்கு முன்னரே நடந்து
அகதி முகாம் சென்று விட்டாள்.

தங்கச்சி விதவை
தனியே நடக்கப் பயப்படுவாள்
ஆனாலும் குழந்தைகளோடு
முன்னோடி முகாமுக்குள்
இடம் பிடித்து விட்டாள்.

அண்ணனின் முதுகில்
புத்தகப் பெட்டி
எந்த நேரத்திலும்
எங்கள் மீது குண்டுகள் வீழலாம்
இந்த நேரத்திலும்
இதை சுமந்து வரவேண்டுமாவென்ற
பார்வை;
அண்ணியின் விழிகளில்

கொஞ்சமும் பொறுமையற்ற நான்;
எப்படித்தான் இவ்வளவு துயரையும்
பொறுத்துக் கொள்கிறேனோ தெரியவில்லை?

முச்சந்தி கடக்க
எனது ஊரான் சுட்டு வீழ்த்தப்பட்ட
செய்தி அறிந்தேன்.

என்ன வாழ்கை எங்களுக்கு
யாரால் விதிக்கப்பட்டது?
பெருமூச்சோடு கண்களில் நீர்த்திவலை

அகதி முகாம் நெருங்க நெருங்க
தற்காலிக ஆறுதல் கிடைக்குமென்ற
அற்ப ஆசை

நேற்றிய பொழுதிலும்
வான்படை வந்து
வெளிச்சம் போட்டு
கெலியிலிருந்து சுட்டார்கள்

சுவரில் காய்ந்து கிடந்தது
போரின் முகம்

இன்றைய பொழுதும்
இப்படியே கழிகிறது
நாளைய பொழுதெனும்..

நலிந்த நம்பிக்கையோடு
நிலத்தில் தெறித்த என் பார்வை
பொம்பரின் சத்தத்துடன்
நிமிர்ந்து பார்த்தேன்.
அதிர்ந்து உயிர் ஓடுங்கி
ஒரு வீட்டின் ஒரமாய்
ஒதுங்கினோம்
குண்டுகள் வீழ்ந்தது
அகதி முகாம் மீது
இனி..
செ.டானியல்ஜீவா –(காலம் இதழ் 34)


இரு துருவங்கள்! அ.யேசுராசா

(1974 மார்கழி)
அப்போது நான் பேராதனையில் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் என்ற எனது சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு விழாவை, எனது சொந்த ஊரான குருநகரில் நடாத்த ஒழுங்குகள் செய்து கொண்டிருந்தேன். எனது வயதை ஒத்த எனது கலை இலய்கியங்களுடன் முரண்படும் அணியைச் சோ.ந்த- இளந்தலைமுறை இலக்கியவாதி ஒருவரும் அவ்விழாவில் நூல் விமர்சனம் செய்ய வேண்டுமென்பது எனது எண்ணம். எனவே யாழ்ப்பாண நண்பர்களுடன் தொடர்பு கொண்டேன். ஒரு பிரச்சாரப் பீர ங்கி எனக் குறிப்பிட்டு, டானியல் அன்ரனியையே பலரும் சிபார்சு செய்தனா.. நண்பா.கள் மூலம் அவரை அக்கூட்டத்தில் பேச ஒழுங்கு செய்தேன்.
நான் கல்வி கற்ற சென் ஜேம்ஸ் பாடசாலையில் வெளியீட்டு விழா மிக எளிமையான முறையில் நடைபெற்றது. கவிஞர். மு.பொன்னம்பலம் தலைமை தாங்க குப்பிளான் ஐ.சண்முகன், மு.புஸ்பராஜன் ஆகியோர் உரையாற்றினா.. டானியல் அன்ரனி காரசாரமாக நூலை விமர்சித்தார். அன்று தான் அவருடன் எனது முதற் சந்திப்பு, அதன் பின் அவருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது.
1976ல் நான் இடமாற்றம் பெற்று யாழ்ப்பாணம் வந்த பின்னர். அடிக்கடி அவரைச் சந்திக்க முடிந்தது. நான் கடமையாற்றிய சுண்டுக்குளி அஞ்சலகத்துக்கும் இடையிடையே அவர் வருவார். கலை, இலக்கியம், அரசியல் எனப் பல விடயங்களைப் பற்றியும் கதைத்துக் கொள்வோம்.
அன்ரனியின் பல கருத்துக்களுடனும் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. இந்த முரண்பாடுகள் அன்று எமது நட்பைப் பாதிக்கவுமில்லை. சில நண்பர்கள் இணைந்து “அலை” என்ற இரு திங்கள் ஏட்டை 1975 கார்த்திகையிலிருந்து நடத்திக் கொண்டிருந்தோம். 1979 சித்திரையிலிருந்து “சமர்.” என்ற ஏட்டை அன்ரனி வெளியிடத் தொடங்கினார். இவ்விரு ஏடுகளும் கருத்து நிலையில் இருதுருவங்களாக இருந்தன. கலை, இலக்கியச் செயற்பாடுகளி லுள்ள முரண்பாடுகள் கூர்மையடைந்த சூழலில், எம்மிருவடையிலான தொடர்பு அறுந்து போயிற்று. கருத்து முரண்பாடு உள்ளவர்கள் நேரில் வெளிப்படையாகக் கதைத்து- உறவு களைப் பேணும் சூழலை கலை தான் பொறுப்பேற்க வேண்டும்.
டானியல் அன்ரனியைப் பற்றி நினைக்கையில் இருவிடயங்கள் தூக்கலாக எனக்கு நினைவுக்கு வருகின்றன.
முதலாவது யாழ்ப்பாணத்தில் ஓரளவு பின்தங்கிய பகுதிகளாகச் சொல்லப்படும் கரயோரப் பகுதியைச் சேர்ந்த ஓர் ஊரிற்கு- நாவாந்துறைக்கு- தனது “சமர்” இதழ் வெளியீடு மூலமும், ஏனைய கலை இலக்கிய செயற்பாடுகள் மூலமும் சிறப்பு அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தார். (குருநகரிலிருந்து அலை வருகிறதா! என வியப்புடன் பலர். கேட்ட அனுபவம் எமக்கு முண்டு. குருநகரும் இக்கடலோரப் பகுதியைச் சேர்ந்ததே).
இரண்டாவது, இலக்கியக் கூட்டங்களிலும்,கருத்தரங்குகளிலும் துணிவாகக் கருத்துக்களை வெளிப்படுத்தும் அவரது தன்மை, அபிப்பிராயம் சொல்ல வேண்டிய இடங்களில் மௌனப் பண்பாட்டைப் பேணிய இலக்கிய உலகில், இது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய முக் கிய செயற்பாடேயாகும்.
குறைந்த வயதில்- எதிர்பாரா முறையில்- அன்ரனி மரணமடைந்தது, பலரைப் போல் எனக் கும் அதிர்ச்சியை தந்தது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆறுதல் வார்த்தைகள்.